மோட்டார் ரூம் கிணற்றுக்குள் சரிந்ததில் பெண் சாவு! 22 மணி நேர போராட்டத்திற்குப் பின் உடல் மீட்பு!

   -MMH 

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டை ஊராட்சி செவல்பட்டியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் சோமன்.  இவருடைய விவசாய நிலத்தில் பணி புரிந்து வருபவர் சித்தப்பட்டியைச் சேர்ந்த ராசு மனைவி அஞ்சலை (வயது 40).

நேற்று முன்தினம் (12/12/21) காலை 7 மணியளவில் அஞ்சலை தனது கணவரிடம் கூறிவிட்டு ஓய்வு பெற்ற ஆசிரியர் சோமன் என்பவரின் வயலுக்கு வேலைக்காகச் சென்றுள்ளார்.

அங்கிருந்த பம்புசெட் மோட்டாரை இயக்குவதற்காக உள்ளே சென்ற பொழுது திடீரென மோட்டார் ரூம் 60 அடி ஆழக் கிணற்றுக்குள் சரிந்தது. அஞ்சலையும் மண்ணுடன் சேர்ந்து சரிந்து கிணற்று நீருக்குள் மூழ்கியுள்ளார். உடன் வேறு யாரும் இல்லாததால், மண் சரிந்து அஞ்சலை கிணற்றுக்குள் புதையுண்டது யாருக்கும் தெரியவில்லை.

இந்நிலையில், இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வந்த ராசு, அந்நேரம் வரை அஞ்சலை வீடு திரும்பாததைத் தெரிந்து, பதட்டமாகியுள்ளார். உடனடியாக சோமன் வீட்டிற்குச் சென்று, தனது மனைவி வயல் வேலை முடிந்து வீட்டிற்கு வராததை கூறியுள்ளார். பின்பு, அங்கிருந்து புறப்பட்டு ஆசிரியர் சோமனின் வயலில் சென்று மனைவியைத் தேடியுள்ளார். 

அப்போது மோட்டார் ரூம் சரிந்து கிணற்றுக்குள் விழுந்துள்ளதைக் கண்ட ராசு அதிர்ச்சியுற்றார். அப்பொழுது மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் அஞ்சலையின் சாப்பாட்டுக்கூடை மற்றும் செருப்பு மட்டும் இருந்துள்ளன.

உடனே எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கூறியுள்ளார். உடனே அங்கு விரைந்து வந்த எஸ்.எஸ்.கோட்டை காவல்துறை அதிகாரிகள் சம்பவ நடந்த இடத்தை பார்வையிட்டு சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவிற்கு தகவல் கொடுத்தனர். 

அடுத்த அரை மணி நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த தீயணைப்பு மீட்பு பணியினர் உடனடியாக நீருக்குள் இறங்கி தேட முற்பட்டனர். அப்போதும் மண்சரிவு ஏற்பட்ட காரணத்தினால் அந்த முயற்சியை கைவிட்ட தீயணைப்புப் படையினர் மோட்டார்கள் மூலம் நீரை வெளியேற்றும் பணியைத் துவக்கினர்.

மண் சரிந்து கிணற்றுக்குள் பெண் மூழ்கிய இந்தச் சம்பவத்தை அறிந்த மாவட்ட வருவாய் ஆட்சியர் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர் பிரபாகரன், திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் ஆத்மநாதன், சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல் செல்வி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சிங்கம்புணரி நிலைய அலுவலர் அருள்ராஜ், திருப்பத்தூர் நிலைய சிறப்பு அலுவலர் ஆனந்த சுப்பிரமணியன், எஸ்.எஸ்.கோட்டை காவல் ஆய்வாளர் அந்தோணி செல்லத்துரை, சிங்கம்புணரி மற்றும் திருப்பத்துார் தீயணைப்புத் துறை வீரர்கள், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்ரமணிய ராஜூ, பாலசுப்பிரமணியன், மின் வாரிய பணியாளர்கள், சிங்கம்புணரி பேரூராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துரிதமாக செயல்பட்டு அஞ்சலையை உயிருடன் மீட்க போராடினர்.

நேற்று பகல் முழுவதும் நீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. மாலை, கிணற்றின் அடியில் மணலில் மூழ்கிக் கிடந்த அஞ்சலையின் உடலைக் கண்டுபிடித்தனர். உடனே தீயணைப்புப்படையினர் கயிறு கட்டி அஞ்சலையின் உடலை மேலே கொண்டு வந்தனர். உடனடியாக அஞ்சலையின் உடலைக் கைப்பற்றிய எஸ்.எஸ்.கோட்டை காவல்துறையினர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

அஞ்சலையின் மரணத்தால் கணவர் ராசு, இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். வறுமையில் உள்ள அந்த குடும்பத்தாருக்கு அரசு நிவாரணம் தந்து அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என ஊர் பொதுமக்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

- பாரூக், ராயல் ஹமீது.

Comments