250 கி.மீ வேகம், ரூ.145 கோடி விலை' முப்படைத் தளபதியை காவு கொண்ட ஹெலிகாப்டர் குறித்த முழுத் தகவல்கள்!!

 

-MMH

      இந்திய ராணுவத்தின் முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. பிபின் ராவத் பயணம் செய்தது Mi-17V-5 வகை ஹெலிகாப்டர். ரஷ்யாவின் கஸான் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ராணுவ ஹெலிகாப்டர் இது. 2015ம் ஆண்டில் இந்த ஹெலிகாப்டர் ஒன்றின் விலை 145 கோடி ரூபாய். உலகின் மிக நவீனமான ஹெலிகாப்டராக இது கருதப்படுகிறது. ராணுவத் தாக்குதல் நடத்துவது, வீரர்களை ஏற்றிச் செல்வது, எல்லைக் கண்காணிப்பு, தீயணைப்பு, ராணுவத்துக்கு சரக்குகளை எடுத்துச் செல்வது என எல்லாப் பணிகளுக்கும் பயன்படுகிறது.

அதிகபட்சமாக 36 பேர் வரை பயணம் செய்யக்கூடிய பெரிய ஹெலிகாப்டர் இது. 4,500 கிலோ வரை பொருட்கள் எடுத்துச் செல்லலாம். மணிக்கு 250 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும் இந்த ஹெலிகாப்டரில், அதிகபட்சமாக 580 கி.மீ தூரம் வரை தொடர்ச்சியாக பயணிக்கலாம். சில ஹெலிகாப்டர்களை இரவில் இயக்க முடியாது. ஆனால், இது இரவு பகல் என எந்த நேரத்தில் பயணம் செய்யும். குளிர் நிறைந்த உயரமான மலைகள், பாலைவனங்கள் என எந்த தட்பவெப்பத்திலும் இயங்கும். 6 ஆயிரம் மீட்டர் உயர மலைப்பகுதியில்கூட அநாயாசமாக இது பயணம் செய்யும்.

இமயமலையின் பனி படர்ந்த சியாச்சின் பிரதேசத்தில் எல்லைக்காவல் புரியும் வீரர்களுக்கு முன்பெல்லாம் ஆயுதங்களையும் உணவுப்பொருட்களையும் எடுத்துச் சென்று தருவது கடினமாக இருந்தது. Mi-17V-5 ஹெலிகாப்டர் வந்தபிறகே அந்தப் பிரச்னை தீர்ந்தது. இப்போது சியாச்சினில் இருக்கும் வீரர்களுக்கு எல்லாவற்றையும் சுமந்து செல்வது இந்த ஹெலிகாப்டர்கள்தான்.

இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகள், ராக்கெட்கள், மெஷின் கன்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கும். சர்ஜிகல் ஸ்ட்ரைக், தீவிரவாதிகளை வேட்டையாடுதல் போன்ற விஷயங்களுக்கு இது அதிகம் உதவும். அதேபோல, ஏவுகணைத் தாக்குதல்களை சமாளிக்கும் பாதுகாப்பு கவசமும் இதில் இருக்கும். இதை இயக்கும் பைலட்டால் இரவு நேரத்திலும் துல்லியமாகப் பாதையைப் பார்க்க முடியும். மேலும் ஆட்டோ பைலட் சிஸ்டம் பொருத்தப்பட்ட மிகச்சில ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்று. அதனால், பைலட் இல்லாமலும் இது தானாக இயங்கும்.

கவச வாகனம் போல பாதுகாப்புத் தகடுகள் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர் என்பதால், விபத்தில் சிக்கினாலும் உள்ளே இருப்பவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு அதிகம். இதன் எரிபொருள் டேங்கும் விபத்தில் வெடித்து சிதறி எரியாதபடி பாலியூரிதேன் பாதுகாப்பு கொண்டது. தீவிபத்து ஏற்பட்டால் அணைக்கும் கருவிகளும் உள்ளன. என்றாலும், பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறி எரிந்திருக்கிறது.

பொதுவாக ரஷ்ய போர்க்கருவிகளையோ, ராணுவ விமானங்களையோ அமெரிக்கா வாங்காது. ஆனால், ஆப்கானிஸ்தான் போரில் பயன்படுத்துவதற்காக ரஷ்யாவிலிருந்து 63 Mi-17V-5 ஹெலிகாப்டர்களை வாங்கியது. இந்திய விமானப்படை விரும்பி வாங்கும் ஹெலிகாப்டராக இதுவே இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் 163 Mi-17V-5 ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்கியுள்ளது. இந்தியாவில் இவற்றைப் பழுது பார்க்கும் வசதிகளையும் ரஷ்யன் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனம் ஏற்படுத்தித் தந்துள்ளது.

மிகவும் பாதுகாப்பானது என்பதால், வி.ஐ.பி-க்கள் பயணம் செய்வதற்காக இதில் 10 ஹெலிகாப்டர்கள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் என்று பலருமே குறுகிய தூரப் பயணங்களுக்கு பயன்படுத்துவது இந்த ரக ஹெலிகாப்டரைத்தான். மிக அரிதாகவே இந்த ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கும். அப்படி ஒரு விபத்தில் இந்தியாவின் முதல் முப்படைத் தளபதியே சிக்கியது சோகம்.

-சோலை. ஜெய்க்குமார்/ Ln. இந்திராதேவி முருகேசன்.

Comments