விவசாயின் தின விழாவையொட்டி 2,500 விதைப்பந்துகளை தயாரித்த மாணவர்கள்! பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க முடிவு !!

 

-MMH

               பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக விவசாயிகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இணைந்து பள்ளி வளாகத்தில் 2,500 விதைப்பந்துகளை தயாரித்தனர். செம்மண் மற்றும் பள்ளியில் தயாரிக்கப்பட்ட இயற்கை உரம், மண்புழு உரத்தை கொண்டு தேக்கு, பப்பாளி விதைப்பந்துகளை தயாரித்து பசுமையை விதைப்போம் என்ற வாசகத்துடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மேலும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் வகையில் துணிப்பை வழங்கப்பட்டது. இது தவிர பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று கானா பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆதார் அடையாள அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக 10 மரக்கன்றுகள் வளர்க்க வேண்டும் என்று நாடகம் மூலம் நடித்து காண்பிக்கப்பட்டது. முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி நன்றி கூறினார். 

இதுகுறித்து சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை கீதா கூறியதாவது:- 

காற்றை விலை கொடுத்து வாங்காமல் இருக்கவும், சுகாதாரமான சூழலை பராமரிக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்படுகிறது. எனவே பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணிப்பை, மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும். இதுகுறித்து மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

தற்போது மாணவ-மாணவிகள் படித்து விட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். இதனால் விவசாயத்தின் முக்கியத்துவம் தெரிவதில்லை. இதன் காரணமாக விவசாயம் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி வளாகத்தில் மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது.

இது தவிர மூலிகை செடிகள், காய்கறிகள் பயிர்கள் வளர்க்கப்படுகிறது. உணவு பற்றாக்குறையை தீர்க்க ஒவ்வொரு தனிமனிதனும் தனது உணவு தேவையை பூர்த்தி செய்வதற்கு வீடுகளில் காய்கறிகள், கீரைகளை உற்பத்தி செய்ய வேண்டும். தற்போது பள்ளியில் தயாரிக்கப்பட்ட விதைப்பந்துகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர், 

-சி.ராஜேந்திரன்.

Comments