தூத்துக்குடியில் 350 மோட்டார்கள் மூலம் அகற்றியும் குறையாத வெள்ளம்..!!

   -MMH 

    தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து உள்ளது. கடந்த மாதம் 25-ந் தேதி பெய்த கனமழை தூத்துக்குடி மாவட்டத்தையே புரட்டி போட்டது. இதனால் மாவட்டத்தில் திரும்பிய பக்கமெல்லாம் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தண்ணீரையே பார்க்காத பல வறண்ட காட்டாற்று ஓடைகளில் எல்லாம் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கடந்த சில நாட்களாக மழை குறைந்து நல்ல வெயில் அடித்து வருகிறது. இதனால் மழைநீர் வேகமாக வடிந்து வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சியில் ஆண்டுதோறும் *மழைவெள்ள பாதிப்புக்கு உட்படும் முத்தம்மாள் காலனி, ரகுமத்நகர், ராம்நகர், ராஜீவ்நகர், தனசேகரன் நகர், ஆதிபராசக்தி நகர் பகுதிகள் இந்த ஆண்டும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

கடந்த 13 நாட்களாக வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. இதனால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர். இதனால் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முத்தம்மாள் காலனி பொதுமக்கள் மழைநீரை அகற்றாத அதிகாரிகளை கண்டித்து பேனர் வைத்து உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதே போன்று மாநகரில் பிற புறநகர் பகுதிகளிலும் மழை நீர் தேங்கி உள்ளது.

இந்த மழைநீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சுமார் 350 மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தண்ணீர் செல்லும் பாதைகளில் குப்பைகள் விழுந்து தண்ணீர் வெளியேறுவதை தடைபடாமல் கண்காணிப்பதற்காக நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட நகராட்சிகளில் இருந்து 52 முன்கள பணியாளர்கள் வந்து உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் நோய் பரவாமல் தடுப்பதற்காகவும், தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் சுகாதார பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-வேல்முருகன்,தூத்துக்குடி. 

Comments