மேட்டுப்பாளையம் அருகே லாரி மோதியதில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது!!!

 -MMH 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை 7.45 மணிக்கு சத்தியமங்கலத்துக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் மேட்டுப்பாளையம்- சிறுமுகை ரோட்டில் உள்ள ஆலாங்கொம்பு பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சிறுமுகை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த பஸ்சை டிரைவர் தங்கவேல் (வயது 59) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக கோபால்ராஜ் (46) என்பவர் பணியில் இருந்தார். இந்த பஸ்சில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். 

காலை 8.30 மணியளவில் தென்திருப்பதி ரோட்டில் இருந்து ஆலாங்கொம்பு சாலைக்கு வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில், அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் பஸ்சின் பக்கவாட்டு மற்றும் லாரியின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது.

இதில் பஸ்சில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி, காயம் அடைந்து அபய குரல் எழுப்பினர். விபத்து நடந்தபோது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பஸ்சில் இடிபாடுகளில் சிக்கி தவித்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். இந்த விபத்தில் பஸ் டிரைவர் தங்கவேல், கண்டக்டர் கோபால் ராஜ், பஸ் பயணிகள் ஈஸ்வரி (56), சீனிவாசன் (68), விஜயலட்சுமி (65), யாஷிகா (21), விஜயகுமாரி (61) மற்றும்  லாரி டிரைவர் முனிசாமி (30) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதில் முதலுதவிக்கு பின்னர் ஈஸ்வரி, சீனிவாசன், யாசிகா, விஜயகுமாரி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், தென்திருப்பதி சாலையில் இருந்து வந்த லாரி டிரைவர், சிறுமுகை ரோட்டில் வந்த அரசு பஸ்சை கவனிக்காததே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments