சிங்கம்புணரிக்கு இலக்கியப் பெருமை தேடித்தந்த எழுத்தாளர் ப.சிங்காரத்தின் நூற்றாண்டு விழா! சிங்கம்புணரியில் இன்று நடைபெறுகிறது!

-MMH

       இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த இலக்கியப் படைப்பு என்று நவீன தமிழ் எழுத்தாளர்களால் பாராட்டப்படும் "புயலிலே ஒரு தோணி" என்ற நாவலைத் தந்த, சிங்கம்புணரி மண்ணின் மைந்தர், எழுத்தாளர் ப.சிங்காரம் அவர்களின் நூற்றாண்டு விழா இன்று சிங்கம்புணரியில் கொண்டாடப்படுகிறது. சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோவில் திருமண மண்டபத்தில் இந்நிகழ்வை மத்திய அரசின் சாகித்ய அகாதமி நிறுவனமும், "தொடரும் இலக்கிய இதழும்" இணைந்து நடத்துகின்றன.

ப.சிங்காரம், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பழனிவேல் நாடார் - உண்ணாமலை அம்மாள் இணையருக்கு, ஆகஸ்டு 12, 1920ல் மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை சிங்கம்புணரி ஆரம்பப் பள்ளியில் படித்தார். மேற்படிப்பிற்காக, மதுரையிலுள்ள செயிண்ட் மேரிஸ் உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். 18வது வயதில் பணிபுரிவதற்காக இந்தோனேசியா சென்றார்.

அங்கு திருமணம் செய்து கொண்டார். இவரது 25வது வயதில், இவரின் மனைவி மற்றும் குழந்தை பேறுகாலத்தின் போது இறந்துவிட்டனர்.  இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இந்தியா வந்த ப.சிங்காரம் மதுரையிலுள்ள 'தினத்தந்தி' நாளேட்டில் பணி புரிந்தார். அவர் எழுதியது 1950ல் "கடலுக்கு அப்பால்", 1962ல் "புயலிலே ஒரு தோணி" என இரண்டு நாவல்கள்தான். ஆனால், அந்த இரு நாவல்களும் காலத்தைக் கடந்து நிலைத்து நிற்பவை.

எழுதியபோது பெரிதாகப் போற்றப்படாமல் இருந்தாலும், இப்போது வாசகர்களாலும் எழுத்தாளர்களாலும் கொண்டாடப்படுபவை அவை. அவர் 'எழுத்தாளர்களின் எழுத்தாளர்', 'கலைஞர்களின் கலைஞர்' என, இப்போது இலக்கியக் கூட்டங்களில் கொண்டாடப்படுகிறார். நவீன தமிழ் எழுத்தாளர்கள் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பு என்று "புயலிலே ஒரு தோணி" நாவலைக் குறிப்பிடுகிறார்கள். மேலும், அந்த நாவல் எல்லாக் காலத்துக்கும் ஏற்றவாறு எழுதப்பட்டது என்றும் தமிழ் இலக்கிய அறிஞர்களால் குறிப்பிடப்படுகின்றது.

இரண்டாம் உலகப் போரின் பின்னணியில், சுமத்திராவில் நடக்கும் கதையை இந்த நாவல் எடுத்துரைக்கிறது. 1987ல் விருப்ப ஓய்வு பெற்றார். அவர் யாருடனும் அதிகமாக நெருங்கிப் பழகவில்லை. 50 வருடங்களாக மதுரையிலுள்ள ஒய்.எம்.சி.ஏ. விடுதியில் தனியாக வாழ்ந்தார். 1997ல், தனது இறுதிக்காலத்தில், தாம் ஈட்டிய ஏழு லட்ச ரூபாய் பணத்தை நற்காரியங்களுக்கு செலவிடக்கூறி கொடுத்துவிட்டு. தனது புகைப்படத்தையும், தனது பெயரையும் எக்காரணத்தைக் கொண்டும் யாரும் பயன்படுத்தக் கூடாது என கண்டிப்பாகச் சொல்லியிருக்கிறார். அதே ஆண்டு, அதாவது 1997 டிசம்பர் மாதம் 30ஆம் தேதி உடல்நலக் கோளாறின் காரணமாக இறந்திருக்கிறார். தனது இறப்புச் செய்தியை யாருக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தமிழ்ச் சமூகம் கொண்டாட வேண்டிய, ஆனால் பெரிய புகழ் வெளிச்சம் இல்லாமலே இறந்து போன அல்லது எந்தப் புகழ் வெளிச்சத்தையும் விரும்பாத, தமிழ் இலக்கிய உலகின் தனிப்பெரும் எழுத்தாளர், அவர். ப.சிங்காரம் அவர்களை சாகித்ய அகாதமி நினைவு கூறுவதும், அவரது நூற்றாண்டுக்கு சாகித்ய அகாதமி விழா எடுப்பதும் நமது சிங்கம்புணரிக்கு பெருமை சேர்கக்கூடிய விடயமாகும். இவ்விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொள்கிறார். கவிஞர் சிற்பி மற்றும் எழுத்தாளர் கிருங்கை சேதுபதி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். மாலை 4 மணி வரை இவ்விழா நடைபெற உள்ளது.

-பாரூக், ராயல் ஹமீது.

Comments