பொள்ளாச்சி ரயில்வே தரை மட்ட பாலம் சேதமானதால் வாகன ஓட்டிகள் அவதி! - சரி செய்ய தவறும் பட்சத்தில் ஆர்ப்பாட்டம் - மக்கள் நீதி மய்யம் எச்சரிக்கை!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை ரோடு சீனிவாசபுரம் ரயில்வே தரைமட்டபாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை முறையாக கட்டமைக்கப்பட வில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக சாலையில் அடிக்கடி கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டி வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகிறது. மேலும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் இந்த பாலத்தை கடந்து செல்லும்போது அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். சாலையில் குண்டும் குழியும் ஏற்படும்போதெல்லாம் சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு சீரமைத்து வந்தாலும் பயனில்லை மீண்டும் மீண்டும் சேதமாவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்த சாலையை சீரமைப்பது எப்பொழுது...?அச்சமின்றி வாகன ஓட்டிகள் பயணிப்பது எப்பொழுது...? என்ற கேள்விகளோடு வாகன ஓட்டிகள் கடந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இதை அறிந்த மக்கள் நீதி மய்யத்தின் வால்பாறை தொகுதி கோவை மாவட்ட துணை செயலாளர் அம்பராம்பாளையம் கமல் பாவா சீனிவாசபுரம் ரயில்வே தரைமட்ட பாலத்தின் சாலையை நேரில் சென்று பார்வையிட்டார். பின்பு நமக்கு அளித்த பேட்டியில்: "வாகன போக்குவரத்து மிகுந்த சீனிவாசபுரம் ரயில்வே தரைமட்ட பாலத்தில் ஏற்பட்ட சேத பகுதிகளை வாகன ஓட்டிகளின் இடத்திலிருந்து பார்க்கும் பொழுது தான் தெரியும் இந்தக் குழிகளும் நீட்டிக்கொண்டு இருக்கின்ற கம்பிகளும் எந்த மாதிரி பிரச்சினைகளை கொண்டு வரும் என்று. இதைக் கண்டும் காணாமல் இருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை முழுமையாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுத்து இனிவரும் காலங்களில் விபத்தை தவிர்க்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
"சாலையை சீரமைக்க தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்டித்து பொதுமக்களின் ஆதரவோடு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்திட தயாராக இருக்கிறோம். அதேசமயம் காலம் கடத்தாமல் சாலையை சரி செய்து கொடுப்பார்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றோம்" என்று கூறிக்கொண்டு கடந்து சென்றார்.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.
Comments