காட்டு யானைகளின் நடமாட்டத்தை அறிய புதிய செல்போன் செயலி அறிமுகம்! வனத்துறை அதிகாரிகள் தகவல்!!
வால்பாறையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிக்குள் புகும் காட்டு யானைகள் வீடுகளை உடைத்து நாசம் செய்து வருகிறது. எனவே மனித- வனவிலங்குகள் மோதலை தடுக்கவும், சேதங்கள் ஏற்படுத்துவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக மானாம்பள்ளி, வால்பாறை வனச்சரக பகுதிக்கு உட்பட்ட எஸ்டேட் நிர்வாகங்களுக்கு சிறப்பு முகாம் அட்டக்கட்டியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக வன மேலாண்மை பயிற்சி மையத்தில் நடந்தது.
இதில் புலிகள் காப்பக துணை கள இயக்குனர் கணேசன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வால்பாறையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் எஸ்டேட் நிர்வாகங்கள் வனத்துறை அறிவிப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எஸ்டேட் நிர்வாகத்திற்கு உட்பட்ட தொழிற்சாலை, குடியிருப்புகளில் முதியவர்களை இரவில் காவல் பணியில் அமர்த்தக்கூடாது. இரவில் வேலை முடிந்து செல்லும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
எஸ்டேட் பகுதியில் அதிகளவில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடை பகுதியில் சூரிய மின்வேலி அமைக்க வேண்டும். மேலும் எஸ்டேட் பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து தெரிந்து கொள்ள எலிபென்ட் செல் என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த செயலியில் எந்தெந்த பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது என்பது அறிவிக்கப்படும். அதுபோன்று பொதுமக்களும் தங்கள் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்தால் அதை இந்த செயலியில் தெரிவிக்க லாம். உடனே வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
வனவிலங்குகள் தாக்குதலுக்கு உள்ளாகி இழப்புகள் ஏற்படும் போது வனத்துறையின் மூலம் வழங்கப்படும் நிவாரணங்களை பெற சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு எஸ்டேட் நிர்வாகம் உதவி செய்ய வேண்டும். மேலும் வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பணிக்கு வனத்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு எஸ்டேட் நிர்வாகங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் இயற்கை வனவளபாதுகாப்பு மைய ஆராய்ச்சியாளர் கணேஷ்ரகுராம், வனத்துறை அதிகாரிகள் மற்றும் எஸ்டேட் நிர்வாக மேலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை பயிற்சி மைய உதவி வனபாது காவலர் செல்வம், விலங்கியலாளர் பீட்டர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன். திவ்ய குமார், வால்பாறை.
Comments