வால்பாறை அருகே கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகளை சேதப்படுத்திய காட்டுயானைகள்! எஸ்டேட் குடியிருப்புவாசிகள் அச்சம்! !

   -MMH 

   வால்பாறை அருகே சிங்கோனா எஸ்டேட் 2-வது பிரிவு தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு 4 காட்டுயானைகள் புகுந்தன. இதை கண்ட தொழிலாளர்கள் கூச்சலிட்டு விரட்டியடித்தனர். மேலும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

இதற்கிடையில் அங்கிருந்து சென்ற காட்டுயானைகள், டேன்டீ பணிமனை கதவு, ஜன்னலை உடைத்துவிட்டு வனப்பகுதிக்குள் சென்றன.பின்னர் மீண்டும் நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள், அங்குள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்குள் சென்றன. 

பின்னர் மதுரை வீரன் சிலை, விநாயகர் சிலையை உடைத்தன. கதவுகளை உடைத்து உண்டியல், பீரோ, அம்மனுக்காக வைத்திருந்த பட்டு துணிகள், மணி மற்றும் பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். 

இந்த கோவிலை காட்டுயானைகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகையையொட்டி விழா நடத்த எஸ்டேட் மக்கள் முடிவு செய்திருந்த நிலையில், கோவிலை காட்டுயானைகள் சேதப்படுத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments