பராமரிப்பு இல்லாததால் புதர் சூழ்ந்து காணப்படும் வ.உ.சி. சிறுவர் பூங்கா! திறக்கப்படுவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!

 -MMH 

கோவை நகரின் மையப்பகுதியில் வ.உ.சி. மைதானம் உள்ளது. இதனருகில் சிறுவர் பூங்கா காணப்படுகிறது. இந்த பூங்காவிற்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து செல்வது வழக்கம். அங்குள்ள உபகரணங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ்வார்கள். மேலும் பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வது, அமைதியான சூழலில் குழந்தைகள் விளையாடுவதை கண்டு ரசிப்பது என பொழுதை கழிப்பார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம் அடைந்ததும், கோவை வ.உ.சி. சிறுவர் பூங்கா மூடப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் குறைந்தாலும் தற்போது வரை பூங்கா திறக்கப்படவில்லை. மேலும் முறையாக பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்படவில்லை.

இதன் காரணமாக அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் போன்றவை உடைந்து காணப்படுகின்றன. மேலும் பூங்காவில் புதர் செடிகள் ஆங்காங்கே அடர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் பார்ப்பதற்கு பூங்கா வனமாக மாறி போனதோ? என்று எண்ண தோன்றும் வகையில் உள்ளது. 

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

எங்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக வ.உ.சி. சிறுவர் பூங்கா விளங்கியது. அங்கு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக சென்று வந்தோம். தற்போது அந்த இடத்தை பார்க்கவே வருத்தமாக உள்ளது. காரணம், முறையான பராமரிப்பின்றி கேட்பாரற்று கிடக்கிறது. குழந்தைகள் விளையாடி மகிழ்ந்த உபகரணங்கள் உடைந்து கிடக்கின்றன. 

டிக்கெட் வழங்கும் இடம் உள்பட அனைத்து இடங்களிலும் குப்பைகள் நிறைந்து, ஆங்காங்கே செடிகள் வளர்ந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. அதில் விஷ ஜந்துகள் பதுங்கி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் அந்த பூங்காவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அவர்களை நம்பி பூங்கா அருகில் சாலையோரத்தில் பல்வேறு கடைகள் செயல்பட்டு வந்தன.

ஆனால் பூங்கா திறக்கப்படாமல் உள்ளதால், அந்த கடைகளில் வியாபாரம் இல்லை. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பொழுதை கழிக்க வரும் நாங்களும், பூங்கா பூட்டி கிடப்பதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்புகிறோம். எனவே பூங்காவை புதுப்பொலிவுடன் சீரமைத்து மீண்டும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments