ஆசிரியைக்கு பாலியல் பாடமெடுத்த ஆசிரியர் கைது...!!

   -MMH 

   ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பெண் ஆசிரியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசுப் பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பாலியல் தொல்லை தொடர்பான புகாரில் அண்மைக்காலமாகப் பல இடங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் பொறுப்புகளில் உள்ளவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அண்மையில் கோவையில் ஒரு மாணவியும், கரூரில் ஒரு மாணவியும் பாலியல் தொல்லையால் கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரிழந்தது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே சத்திரக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் வரலாற்று பாடப்பிரிவு ஆசிரியர்களாக பரமக்குடியை சேர்ந்த மலர்விழி, நாகாச்சி கிராமத்தை சேர்ந்த சந்திரன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இதற்கிடையில், ஆசிரியர் சந்திரன் பெண் ஆசிரியை மலர்விழிக்கு ஆபாச குறுந்தகவல் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனையடுத்து மலர்விழி சத்திரக்குடி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சத்திரக்குடி காவல்துறையினர், ஆசிரியர் சந்திரனை கைது செய்து சிறையிலடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- பாரூக், ராயல் ஹமீது.

Comments