சிங்கம்புணரி அருகே கார் கவிழ்ந்து விபத்து! மீட்பு பணியில் இறங்கிய மாவட்ட சேர்மன்!
சிவகங்கை மாவட்ட சேர்மனாகப் பதவி வகித்து வருபவர் பொன்மணி பாஸ்கரன். இவரது சொந்த ஊரான சொந்த ஊரான எஸ்.புதூர் ஒன்றியம் பொன்னடப்பட்டியில் இருந்து இன்று மதியம் அலுவல் சம்பந்தமாக சிவகங்கை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது காயாம்பட்டி அருகில் சென்றுகொண்டிருந்தபோது கார் ஒன்று தலைகீழாக கவிழ்ந்த நிலையில் சாலை ஓரத்தில் விபத்துக்குள்ளாகி கிடந்தது.
உடனடியாக மாவட்ட சேர்மன், தனது காரை விட்டு கீழே இறங்கி விபத்துக்குள்ளாகி இருந்த காரின் அருகே சென்று பார்த்த போது காரின் உள்ளே இரண்டு பேர், இரத்தக் காயங்களுடன் மயங்கிய நிலையில் காணப்பட்டனர். விபத்துக்குள்ளான கார் கதவு திறக்கும் நிலையில் இல்லை. உடனே அந்த கார் கண்ணாடியை உடைத்து, உடனிருந்தவர்கள் உதவியுடன் அவர்களை மீட்டுள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியை நாடியுள்ளார். ஆம்புலன்ஸ் வரத் தாமதமானதால் பொன்மணி.பாஸ்கரன் விபத்துக்குள்ளானவர்களை தனது வாகனத்திலேயே ஏற்றிக் கொண்டு விரைந்து சென்று எஸ்.புதூர் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்ந்துள்ளார். உலகம்பட்டி காவல் ஆய்வாளர் கலா ராணியும் எஸ்.புதூர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தார்.
விபத்துக்குள்ளானவர்களை மீட்க தனக்கு உதவியாக இருந்த எஸ்.புதூர் ஒன்றியம், மணலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சேது தவசீலனுக்கும் மற்றும் கட்டுக்குடிப்பட்டி பாங்க் ஆஃப் பரோடா வங்கி மேலாளர் மகேஷ்குமார் அவர்களுக்கும் மாவட்ட சேர்மன் நன்றியை தெரிவித்தார்.
மேலும், மாவட்ட சேர்மன் பொன்மணி.பாஸ்கரன் "சாலை விபத்து ஏதும் நடந்து, யாருக்கும் தீங்கு ஏற்பட்டால், தயவுசெய்து சற்றும் தாமதிக்காமல் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி செய்ய உதவுங்கள். காவல்துறை இது போன்ற விசயங்களுக்கு உங்களை பாராட்டுவார்களே தவிர, சட்ட ரீதியான எந்த சிக்கல்களும் உங்களுக்கு நேராது என்பதையும் மனதில் கொள்ளுங்கள்" என பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
- அப்துல்சலாம், திருப்பத்தூர்.
Comments