கீரணத்தம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வாசிகள் அவதி! கழிவுநீர் வடிகால் வசதி வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்!
கழிவு நீர் தேங்குவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கீரணத்தம் பகுதியில், கல்லுக்குழியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 1,200 வீடுகள் உள்ளன. அந்த குடியிருப்பில் இருந்து கழிவுநீர் வெளியேற சரியான வடிகால் வசதி இல்லாததால், சாலை வழியாக வெளியேறி, அருகில் உள்ள தொழிற்பேட்டையில் குளம்போல் தேங்கி நிற்கிறது.இது குறித்து தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள், பலமுறை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நிர்வாகத்திடமும், கீரணத்தம் ஊராட்சி அலுவலகத்திலும் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆவேசமடைந்த மக்கள் நேற்று காலை கல்லுக்குழியில் இருந்து கொண்டையம்பாளையம் செல்லும் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். கோவில்பாளையம் போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். குடிசை மாற்று வாரிய பொறியாளரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டனர்.'கழிவுநீர் இனி தொழிற்பேட்டை வழியாக வெளியேறாது. தற்போது தேங்கி உள்ள கழிவுநீர் உடனடியாக அகற்றப்படும்' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து தொழிலாளர்கள், பொதுமக்கள், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-S.ராஜேந்திரன்
முகமது சாதிக் அலி.
Comments