சிங்கம்புணரியில் குடிபோதையில் தகராறு! கார் கண்ணாடியை உடைத்த இரு இளைஞர்கள் கைது!

 -MMH 

சிங்கம்புணரி பண்டாரம் காலனியில் வசித்து வருபவர் சேக் அப்துல்லா(வயது34).இவர், தான் பயன்படுத்திவரும் காரை, இரவு நேரத்தில் தனது வீட்டின் அருகில் நிறுத்தி வைப்பது வழக்கம்.

இரு தினங்களுக்கு முன்பு இரவில் அவரது காரை நிறுத்துவதற்காகச் சென்றபோது, அவ்வழியாக ராஜ்குமார்(27) மற்றும் சசி(23) ஆகிய இருவரும் குடிபோதையில் வந்திருக்கின்றனர்.

போதையில், சேக் அப்துல்லா உடன் வாக்குவாதம் செய்து அவரது காரின் பக்கவாட்டுக் கண்ணாடியையும், முன்புற கண்ணாடியையும் உடைத்திருக்கின்றனர்.

இதுபற்றி சேக் அப்துல்லா சிங்கம்புணரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அவரது புகாரின்பேரில் சார்பு ஆய்வாளர் குகன் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் ராஜ்குமார் மற்றும் சசி இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் சிங்கம்புணரி நீதித்துறை நடுவரின் முன் நேர் நிறுத்தப்பட்டு, பரமக்குடி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொதுவாக சிங்கம்புணரி பண்டாரம் காலனியில், அந்தப் பகுதிக்கு சம்பந்தமில்லாத இளைஞர்கள் தினமும் ஒன்று கூடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கின்றனர். குடித்துவிட்டு அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபடுவது அவர்களது வழக்கமாக இருந்துள்ளது.

இவர்களை அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், கண்டிப்பதற்கு பயந்து கொண்டு இருந்துள்ளனர். எனவே, இனிமேலாவது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து அந்தப் பகுதிக்கு சிறிதும் சம்பந்தமில்லாத இளைஞர்கள் அங்கு கூடுவதை தடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

- பாரூக், ராயல் ஹமீது.

Comments