வெள்ளப்பெருக்கு காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை!! வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு! !

   -MMH 

   பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சிக்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையின் மூலம் நீர்வரத்து உள்ளது. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக கடந்த சில மாதங்களாக நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழை காரணமாக நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று காலை திடீரென்று நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. பாறைகள், மரக்கிளைகள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டன. இதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப் பட்டு உள்ளது. 

மேலும் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு பகுதி செல்லாமல் இருக்க நுழைவு வாயில் மூடப்பட்டது. அங்கு வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் மழையின் காரணமாக வால்பாறை மலைப்பாதையில் ஆங்காங்கே திடீர் நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன. இதனால் அத்துமீறி சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது 

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வீழ்ச்சியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நீர்வீழ்ச்சி செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீர்வரத்து குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-S.ராஜேந்திரன்,

திவ்ய குமார் வால்பாறை.

Comments