வனத்துறையினர் அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்படுமா? பொதுமக்கள் பார்வையிட அனுமதி கிடைக்குமா?

   -MMH 

    பதப்படுத்தப்பட்ட சிறுத்தை, புலியின் நான்கு வார கரு, யானையின் எலும்புக்கூடு, 460 ஆண்டுகளுக்கு முந்தைய தேக்கு மரம்... இதெல்லாம் பார்த்ததுண்டா!இவற்றை காண எங்கோ வெளிநாட்டு மியூசியம் போக வேண்டியதில்லை. இதோ நம்மூர் வனத்துறை அருங்காட்சியகத்தில் இருக்கிறது.இரு ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள வன அருங்காட்சியகத்தை திறக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோயம்புத்தூர் மாவட்டம், கவுலி பிரவுன் ரோட்டில் உள்ள வனத்துறை அலுவலக வளாகத்தில் அமைந்திருக்கிறது காஸ் வன அருங்காட்சியகம். காஸ் என்னும் தனி மனிதரின் முயற்சியில் உருவான இந்த அருங்காட்சியகம், 1902-ல் துவங்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள ஒவ்வொரு பொருட்களும், இந்திய காடுகளை பிரதிபலிப்பவையாக உள்ளன.புலியின் நான்கு வார கரு, யானையின் எலும்புக்கூடு, பதப்படுத்தப்பட்ட சிறுத்தை, 460 ஆண்டுகளுக்கு முந்தைய தேக்கு மரம் இப்படி அருங்காட்சியகத்தில் பல்வேறு பொக்கிஷங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.தற்போது இந்த அருங்காட்சியகம், வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன் வரை, இந்த அருங்காட்சியகத்தை காண பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், இவ்வருங்காட்சியகம் மூடப்பட்டது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும், சிறப்பு அனுமதி பெறுவோருக்கும் மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. பொதுமக்கள் பார்வையிடவும் அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டுள்ளது.வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன இயக்குனர் குன்னிக்கண்ணன் கூறுகையில், ''தற்போது பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கப்படும். விரைவில் அதற்கான நடவடிக்கைகள் துவங்கும்,'' என்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments