கஞ்சாவை சட்டரீதியாக விற்க நடவடிக்கை எடுப்பீர்களா? அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் சுளீர் கேள்வி!

 -MMH 

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த கலாவதி என்பவர், உசிலம்பட்டி வட்டத்தில் உள்ள கல்லூத்து ஊராட்சியில் புதியதாகத் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் சார்பில் புதிதாகத் திறப்பதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள மதுபானக் கடைக்குத் தடைகோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கானது நேற்று நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, வேலுமணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் தரப்பில் நேர்நின்ற வழக்கறிஞர், 'இப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் போலி மதுபான விற்பனை நடைபெறுகின்றது. எனவே இப்பகுதியில் மதுக்கடையைத் திறக்க அரசின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத்' தெரிவித்தார்.

இவ்வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், 'போலியாக கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தால், கஞ்சாவை சட்டப்படி விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா?' என கேள்வியெழுப்பினர்.

'தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கைக்  கொண்டுவந்தால் புதுச்சேரிக்குச் சென்றும், இந்தியாவில் முழு மதுவிலக்கைக் கொண்டுவந்தால் வெளிநாட்டிற்குச்  சென்றும் மதுக் குடிப்பார்களா?' எனவும் நீதிபதிகள் விமர்சித்தனர். 

கல்லூத்து கிராம மக்களின் மனுவை பரிசீலனை செய்து, அதன் பிறகு மதுக்கடையைத் திறப்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும், இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் வரும் 20 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

- மதுரை வெண்புலி.

Comments