சரவணம்பட்டியில் முட்புதரில் கை கால்கள் கட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி..!! அதிர்ச்சியில் மக்கள்..!!

   -MMH 

    கோவை சரவணம்பட்டி அருகே பரபரப்பு!  மாணவியை கொன்று முற்புதரில் பிணம் வீச்சு!!  காவல்துறையினர் தீவிர விசாரணை!!!

கோவையை அடுத்த சரவணம்பட்டி சிவானந்தபுரம் சங்கரப்பன் தோட்டம் மாருதி நகரில் உள்ள முள்புதரில் பொதுமக்கள் குப்பை கொட்டுவது வழக்கம். நேற்று காலை சிலர் குப்பை கொட்ட சென்றபோது துர்நாற்றம் வீசியது. 

உடனே அருகில் சென்று பார்த்தபோது சாக்கு மூட்டையில் கை, கால்கள் கட்டப்பட்டு, கம்பளியால் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் பிணம் கிடப்பது தெரியவந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், சாக்குமூட்டையை எடுத்து பிரித்து பார்த்தபோது அதில் சிறுமியின் பிணம் அழுகிய நிலையில் இருந்தது. பின்னர் அந்த சிறுமி யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர்.

மேலும் அந்த பகுதியில் சிறுமி காணாமல் போனது தொடர்பாக வந்த புகார்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமியின் உடல் கிடந்த இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் வசிக்கும் கலைவாணி என்பவர் தனது மகள் கார்த்திகாவை(வயது 15) கடந்த 11-ந் தேதி முதல் காணவில்லை என்று புகார் கொடுத்தது தெரிய வந்தது. 

இதைத்தொடர்ந்து கலைவாணியை போலீசார் சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர். அவர் வந்து பிணமாக கிடந்த சிறுமியின் உடலை பார்த்து கண்கலங்கினார். இறந்து கிடப்பது தனது மகள் கார்த்திகா தான் என்று அடையாளம் காட்டி உறுதிப்படுத்தினார்.  

இதையடுத்து மாணவியின் உடல் கிடந்த இடத்துக்கு போலீஸ் துணை கமிஷனர் உமா, உதவி கமிஷனர் அருண், இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். 

இதில், கலைவாணி தனது கணவர் ராஜேந்திரனை பிரிந்து 2 மகள்களுடன் வசித்து வந்தார். அவருடைய 2-வது மகள் கார்த்திகா சரவணம்பட்டி பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் கடந்த 11-ந் தேதி முதல் காணாமல் போய் உள்ளார் என்பது தெரியவந்தது

அந்த மாணவியின் செல்போன் எண்ணில் இருந்து யாரிடம் கடைசியாக பேசினார் என்று ஆய்வு செய்யப்பட்டது. இதில் அந்த மாணவி, காணாமல் போனதற்கு முன்னதாக உறவினர்களிடம் பேசியது தெரியவந்தது. மாணவியின் தாய் கலைவாணி கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர்களின் வீட்டுக்கு வந்தவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் இருந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் மாணவியின் தாய் கலைவாணியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

மாணவியின் உடல் அழுகிய நிலையில் இருப்பதால் பிரேத பரிசோதனைக்கு பிறகே எப்படி கொலை செய்யப்பட்டார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

நகை, பணத்துக்காக மாணவி கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்பட பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த கொலையில் துப்புத்துலக்கி கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கலைவாணி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற ஒருவரை பிடித்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவியின் பிணம் கிடந்த புதரில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை ஒன்று கொலை செய்யப்பட்டு தூக்கிவீசப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே அங்குள்ள குப்பைமேட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகிறார்கள். 

கோவையில் கடந்த மாதம் 11-ந் தேதி பிளஸ்-2 மாணவி பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட பரபரப்பு அடங்குவதற்குள் 10-ம் வகுப்பு மாணவி படுகொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் கட்டி முள்புதரில் பிணம் வீசப்பட்டு இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மாணவியின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்ட நிலையில் அவரது உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் பிரேத பரிசோதனை கட்டிடம் முன்பு திரண்டனர்.

அப்போது மாணவி கொலைக்கு தீர்வு கிடைக்கும் வரை ஓய மாட்டோம் என்றுக்கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைப்பதாக தெரிவித்து கலைந்து சென்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-சி.ராஜேந்திரன், சாதிக் அலி, சுரேந்தர்.

Comments