ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உயர் பாலூட்டிகள் குறித்து அறிந்துகொள்ள சுற்றுலா ! வனத்துறை அதிகாரிகள் தகவல்! !

   -MMH 

   கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் பல வகை வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அவற்றை பாதுகாக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அங்கு அட்டகட்டி பகுதியில் வனத்துறையின் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வன உயிரின மேலாண்மை பயிற்சி மையம் அமைந்துள்ளது. இதன் சார்பில் வனவிலங்குகள் பாதுகாப்பு, வனப்பகுதிகள் பாதுகாப்பு, மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு, சூழல் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய வனச்சரக பகுதியில் வாழக்கூடிய பொதுமக்கள் மற்றும் வால்பாறை பகுதிக்கு அன்றாடம் வந்து செல்லக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு வனப்பகுதியில் வாழும் அழிந்து வரக்கூடிய விலங்கின பட்டியலில் உள்ள உயர் பாலூட்டி இனங்களான கருமந்தி, சாம்பல் நிற குரங்கு, சிங்கவால் குரங்கு, நாட்டு குரங்கு, தேவாங்கு ஆகியவற்றை பாதுகாப்பதற்காகவும், 

இந்த வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அவைகளால் சுற்றுச்சூழலுக்கும், வனப்பகுதிகளுக்கும் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளவும் ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் உயர் பாலூட்டிகள் திருவிழாவை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி நாளை மறுநாள்(சனிக்கிழமை), 19-ந் தேதி மற்றும் 25, 26-ந் தேதியில் உயர் பாலூட்டிகள் திருவிழாவையொட்டி சிறப்பு சுற்றுலாவை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 

இதன் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பல்வேறு வனப்பகுதிகளுக்கு அழைத்துச்சென்று பாலூட்டிகள் இன வகையிலான குரங்குகள் குறித்த தகவல்களை சுற்றுலா பயணிகளுக்கு தெரிவித்து, அவைகளுக்கு திண்பண்டங்களை போடுவது, வாகனங்களை கவனக்குறைவாக இயக்கி விபத்தை மூலம் உயிழப்புகளை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது, அவை வனப்பகுதிகளின் பெருக்கத்திற்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் எவ்வாறு உதவியாக இருந்து வருகிறது என்பது குறித்து விளக்கமளிக்கப்படுகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இந்த வகையான உயர் பாலூட்டிகளை பாதுகாப்பதற்கு நாம் எவ்வாறு உதவி செய்ய முடியும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த உயர் பாலூட்டிகள் திருவிழா சுற்றுலா அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஒரு நபருக்கு ரூ.1,000 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்றனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-சி.ராஜேந்திரன், 

திவ்யகுமார் (வால்பாறை) ,

செந்தில்குமார் (மூடீஸ்).

Comments