பஸ் படிக்கட்டில் பயணிக்க மாணவர்களை அனுமதிக்கக்கூடாது! போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுரை!!

    -MMH 

பொள்ளாச்சி பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் இருந்து கோவை, பழனி, திருப்பூர் உள்ளிட்ட நகர்புறங்களுக்கும், சுற்று வட்டார கிராமங்களுக்கும் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் மற்றும் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்லும் நபர்களால் பஸ்களில் கூட்டம் அலைமோதும். இதற்கிடையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ்களில் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்கின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்த மாணவர்களை எச்சரித்து கீழே இறக்கி விட்டதுடன் அவர்களுக்கு தகுந்த அறிவுரையும் வழங்கினார்கள்.


இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி கள் கூறியதாவது:

மாணவர்கள் கூட்ட நெரிசல் காரணமாக பஸ்களில் படிக் கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்வதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் ஒரு நபரை நியமித்து தினமும் கண்காணிக்க வேண்டும். 

கூட்டம் அதிகமாக இருந்தால் நெரிசல் ஏற்படாதவாறு பஸ்களில் அவர்களை ஏற்றி விட வேண்டும். மேலும் டிரைவர், கண்டக்டர்களும் படிக்கட்டில் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது. இதையும் மீறி அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக அடிக்கடி பல்லடம் ரோடு, உடுமலை ரோடு மற்றும் பஸ் நிலையம் உள்பட முக்கிய பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments