குற்றங்களை தடுக்கும் வகையில் நடமாடும் விழிப்புணர்வு வாகனம் ரெடி!!

 -MMH 

கோவை மாநகர காவல்துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் நடமாடும் விழிப்புணர்வு வாகனம் தயாராகி வருகிறது.

தமிழக காவல்துறை சார்பில் மேற்கு மாவட்டங்களுக்காக முதற்கட்டமாக கோவைக்கு இந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை என இரு மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட இந்த வாகனத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பெண்கள் வேலைபார்க்கும் தனியார் நிறுவனங்களில் பாலியல் தொல்லை, போக்சோ மற்றும் குற்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் நேரடியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்ட இந்த விழிப்புணர்வு வாகனத்தில் நான்கு புறங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

பெரிய அளவிலான திரை மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து குறும்படம் ஒளிபரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனம் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகள் ஆகிய இடங்களுக்கு சென்று குறும்படம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும், தங்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்கும் வகையில் அந்த எண்களும் வாகனத்தில் எழுதப்பட்டுள்ளது.

தற்போது தயாராகி வரும் இந்த வாகனம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments