தொடர்கதை ஆகிப்போன காட்டு யானைகளின் அட்டகாசம்! எஸ்டேட் குடியிருப்புவாசிகள் அச்சம்!!

   -MMH 

   கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவை குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் 4 குட்டிகள் உள்பட 8 காட்டுயானைகள் முகாமிட்டு தொழிலாளர்களின் வீடுகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. 

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அந்த யானை கூட்டம், சிங்கோனா 10-ம் பாத்தி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. தொடர்ந்து அங்கு பஸ் நிறுத்த பகுதியில் உள்ள புனித ஜெபமாலை மாதா தேவாலயத்தின் பக்கவாட்டு இரும்பு ஜன்னலை உடைத்து அட்டகாசம் செய்தது. மேலும் உள்ளே துதிக்கையை விட்டு ஏதேனும் உணவு பொருட்கள் உள்ளதா? என்று காட்டுயானைகள் தேடின. ஆனால் அங்கு எதுவும் கிடைக்காததால் அருகில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடை கதவை உடைத்தன. 

தொடர்ந்து உள்ளே இருந்த அரிசி மூட்டைகளை வெளியே தூக்கி வீசின. மேலும் சிதறி கிடந்த அரியை தின்றன. இதை அறிந்த தொழிலாளர்கள் உடனடியாக மானாம்பள்ளி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். 

உடனே காட்டுயானைகள் ரேஷன் அரிசி மூட்டைகளை தூக்கிக்கொண்டு வனப்பகுதிக்குள் ஓட்டம் பிடித்தன. அவை குடியிருப்புக்கு அருகிலுள்ள வனப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால், மீண்டும் ஊருக்குள் நுழையும்அபாயம் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-சி.ராஜேந்திரன்,

திவ்ய குமார் ( வால்பாறை).

செந்தில்குமார் (முடீஸ் ).

Comments