ஒன்றிய அரசு பகீர் தகவல்! 7 ஆண்டில் ஐ.ஐ.டி மாணவர்கள் 122பேர் தற்கொலை!

   -MMH 

   இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாடுகள் காரணமாக 72% பட்டியலின மாணவர்கள் ஐ.ஐ.டியில் இருந்து தங்களின் உயர் கல்வி படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறியுள்ளனர்.

அதேபோல, சென்னை உள்ளிட்ட ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் கல்வி நிலையங்களில் தொடர்ச்சியாக மாணவர்கள் மர்மமான முறையில் தற்கொலை கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு ஒன்றிய கல்வித்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவருவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் சங்கங்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நாமக்கல் மக்களவை உறுப்பினர் சின்ராஜ் எழுப்பிய கேள்வி ஒன்றிக்கு, '7 ஆண்டுகளில் 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக' அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம்.

உயர் கல்வி நிலையங்களில் சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் தற்கொலை விவரங்களை வழங்குமாறு மக்களவையில் சின்ராஜ் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம், "2014ம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டுவரை ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 13 பேரும், பட்டியலின பிரிவைச் சேர்ந்தவர்கள் 5 பேரும் அடங்குவர்" என தெரிவித்துள்ளது.

ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் இந்தப் புள்ளி விவரம், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்122 மாணவர்களின் கல்விக் கனவை ஒன்றிய அரசு சிதைத்து விட்டதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

- ராயல் ஹமீது.

Comments