இன்று கடைகள் திறக்கப்படாது என்பதால் நேற்று காலை முதல் பொது மக்கள் கூட்டம் அலைமோதிய கோவை கடை வீதிகள்!!

   -MMH 

   இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழுஊரடங்கையொட்டி கோவை கடை வீதிகளில் பொருட்கள் வாங்க நேற்று பொதுமக்கள் குவிந்தனர். மீன், இறைச்சி வாங்கவும் பலர் திரண்டனர்!

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கை அறிவித்து உள்ளது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பஸ், ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இன்று கடைகள் திறக்கப்படாது என்பதால், கோவை தியாகி குமரன் மார்க்கெட், சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம், வடவள்ளி உள்ளிட்ட உழவர் சந்தைகள் மற்றும் கடை வீதிகளில் நேற்று காலை முதல் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது. 

அவர்கள், தங்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கி சென்றனர். அவர்களில் பெரும்பாலனோர் முகக்கவசம் அணிந்து இருந்தனர். 

முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், கோழி மற்றும் ஆட்டு இறைச்சி விற்பனை அதிகமாக காணப்படும். 

ஆனால் இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று இறைச்சி கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக உக்கடம் மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் திரண்டு மீன்கள் வாங்கி சென்றனர். இதேபோல் கோழி, ஆட்டு இறைச்சி விற்பனை கடைகளிலும் கூட்டம் இருந்தது. எனவே மார்க்கெட்டுகள் மற்றும் கடைவீதிகளில் மாநகராட்சி ஊழி யர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அவர்கள், கடைக்காரர் கள், ஊழியர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். பொதுமக்கள் கூட்டம் திரண்டதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. 

முழுஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை இறைச்சி கடைகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments