அன்பில் மகேஷ் பொய்யாமொழியை புகழ்ந்த முதல்வர் தஞ்சை விழாவில் ருசிகரம்!!

   -MMH 

   29  மற்றும் 30-ஆம் தேதி  இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக தஞ்சைக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்க வந்த தமிழக முதலமைச்சரின் பயணம் பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது .

சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குவதற்காக சென்னையிலிருந்து  வந்த முதல்வரின் பயணம் பல்வேறு ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்ட பொறுப்பாளராக திருச்சியை சேர்ந்த அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நியமிக்கப்பட்டது பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது.

கட்சியின் சீனியர் எம்எல்ஏக்களுக்கு மத்தியிலும்  சில மன வருத்தங்களை ஏற்படுத்தியுள்ளது  என்று கட்சியினர் பேசிக்கொள்கின்றனர் .

கட்சியின் பல்வேறு விஷயங்களிலும்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நுழைந்து  ஆதிக்கம் செலுத்தி வருவது பலருக்கு அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது .

அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கட்சியின் தலைமைக்கு மிகவும் நெருக்கமான முறையில் இருப்பதால்  கட்சியினர் தங்கள்  மனக்குமுறலை வெளிப்படுத்திக் கொள்ள இயலாத  சூழ்நிலை இருந்து வந்தது . இந்த சூழ்நிலையில் தஞ்சாவூர் விழாவிற்கு வந்த முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை வானளாவ புகழ்ந்து தங்களது குடும்பத்தினருக்கும் அன்பில் தர்மலிங்கம் குடும்பத்திற்கும்  மூன்று தலைமுறையாக மிகுந்த நெருக்கமும் தொடர்பும்  உள்ளது என்றும் தாங்கள் இரு குடும்பம் அல்ல ஒரு குடும்பம் என்றும்  மேடையில் பேசியது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.  மேலும் முதலமைச்சர் அவர்கள் அன்பில் தர்மலிங்கம் அவர்களும் தனது தந்தையாரும் நெருக்கமான நண்பர்கள் என்றும் அன்பில் பொய்யாமொழி யும் தனக்கு நெருக்கமான நண்பர் என்றும் தற்போது அடுத்த தலைமுறையைச் சேர்ந்த மகேஷ் அவர்களும் தனது மகன் உதயநிதி அவர்களும் நெருங்கிய நண்பர்கள் என்றும் மூன்று தலைமுறையாக இந்த உறவு நல்ல முறையில் தொடர்வதாகவும் கூறினார். மேலும் அவர் மகேஷ் அவர்களைப் பற்றி கூறும் பொழுது  இந்த இளம் வயதிலேயே கொடுத்த வேலையை சுறுசுறுப்பாகவும் மிகவும் திறம்பட செயலாற்றி வருவதாகவும் தஞ்சை திருச்சி சென்னை என்று மூன்று இடங்களுக்கும் சுழன்று வேலை செய்வதாகவும் கூறினார்.

அவருக்கு கட்சியினர் அனைவரும் நல்ல ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். இதனால் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு கட்சியின் அனைத்து தரப்பினரும் அவருக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கூறி பல்வேறு விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்  என்று தஞ்சையில் கட்சியினர் அனைவரும் பேசிக் கொள்கின்றனர். 

முதலமைச்சர் பின்பு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்துரை தெரிவித்தார். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-ராஜசேகரன் தஞ்சாவூர்.

Comments