பரபரப்பான கட்டத்தை எட்டும் சிங்கம்புணரி பேரூராட்சி நிர்வாகிகள் தேர்வு! முதல்வர் - ப.சிதம்பரம் சந்திப்பு!

   -MMH 

   நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள 18 வார்டுகளில், தேர்வு முடிவுகளின்படி திமுக 14-வார்டுகளையும் (போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட 2 வார்டுகள் உள்பட), காங்கிரஸ் 2 வார்டுகளையும், அதிமுக ஒரு வார்டையும், சுயேட்சை ஒரு வார்டையும் கைப்பற்றினர். தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களில் 9 பேர் பெண்கள். (அதாவது 50%).

எதிர்வரும் 2ஆம் தேதி பேரூராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்பார்கள் என முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்பு மார்ச் 4ஆம் தேதி பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், 14 கவுன்சிலர்களைப் பெற்றுள்ள திமுகவிலிருந்து பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு யார், யார் அறிவிக்கப்பட இருக்கிறார்கள் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் மக்களிடையே பேசப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, இன்று சென்னையில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் - ப.சிதம்பரம் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்தச் சந்திப்பில், சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கித் தருமாறு, முதல்வர் ஸ்டாலினிடம் அவர் கோரியதாகக் கூறப்படுகிறது. மேலும் அவரது கோரிக்கை ஏற்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இன்னொருபுறம், 18-வார்டு உறுப்பினர்களில் 9 பேர் பெண்களாக இருக்கும் நிலையில் பேரூராட்சித் துணைத் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படுமா? எனவும், பேரூராட்சியின் மக்கள் தொகையில் கணிசமாக உள்ள முஸ்லிம்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும் வகையில், ஒரு இஸ்லாமியருக்கு பேரூராட்சி துணைத் தலைவர் பதவி ஒதுக்கப்படுமா? எனவும் பரவலாக பேச்சு நிலவி வருகிறது.

- பாருக்,

சிவகங்கை மாவட்ட தலைமை நிருபர்.

Comments