கோவையில் புதிதாக 50 வார்டுகளை உருவாக்கும் முன் எல்லை விரிவாக்கம் தேவை!

   -MMH 

   கோவை மாநகராட்சியின் வார்டுகளை, 100ல் இருந்து, 150 ஆக அதிகரிப்பதற்கு முன், நகரையொட்டியுள்ள மேலும் பல உள்ளாட்சிகளை இணைக்க வேண்டியது அவசியம்.

கோவை மாநகராட்சியை, 2011ல் விரிவாக்கம் செய்தபோது, மூன்று நகராட்சிகள், ஏழு பேரூராட்சிகள் மற்றும் ஒரு கிராம ஊராட்சி ஆகிய உள்ளாட்சிகள் இணைக்கப்பட்டன. அதற்கு முன், 152 சதுர கி.மீ., பரப்பில் இருந்த மாநகராட்சி, 254 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு விரிந்தது. அப்போதே, அமைப்பு ரீதியாக கோவையுடன் இணைக்கப்பட வேண்டிய பல உள்ளாட்சிகளை, அங்கிருந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சிலரது அரசியல் அழுத்தத்தால், சேர்க்காமல் தவிர்த்து விட்டதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக, இருகூர், வெள்ளலுார், மதுக்கரை பேரூராட்சிகளைச் சேர்க்காதது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

அந்த எதிர்ப்பையும் மீறி, விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில், கோவை மேலும் பல மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது. அப்போது, சற்று இடைவெளியுடன் இருந்த உள்ளாட்சிகள், இப்போது, நகருடன் இரண்டறக் கலந்து விட்டன.கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு உட்பட, 600 ஏக்கருக்கும் அதிகமான பரப்பு அமைந்துள்ளதே, வெள்ளலுார் பேரூராட்சியில்தான். அங்குதான் இப்போது ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டப்படுகிறது.

நகருக்குள் அமைந்துள்ள மத்திய சிறையை, அப்பகுதிக்கு மாற்றவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெள்ளலுார் இப்போதும் தனி பேரூராட்சியாகவே உள்ளது. கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்துக்கும், கிழக்கு மண்டலத்துக்கும் இடையே வெள்ளலுார் பேரூராட்சி பகுதிகள் அமைந்துள்ளன.முதல்கட்டமாக, வெள்ளலுார் பேரூராட்சியை கோவை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டியது அவசியம். அதேபோல் இருகூர், ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சிகள், சின்னியம்பாளையம், நீலாம்பூர், கீரணத்தம் ஊராட்சி பகுதிகளும் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளன.

அப்பகுதிகளையும் மாநகராட்சியுடன் இணைத்தால் மட்டுமே, எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்களை வகுக்க முடியும். ஏனெனில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், வார்டு வரையறை மிகவும் குளறுபடியாக இருந்தது. சில வார்டுகளில் 25 ஆயிரம், 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்கள், சில வார்டுகளில் 10 ஆயிரத்துக்கும் குறைவான வாக்காளர்கள் இருந்தனர். அதனால், மக்கள் தொகை கணக்கெடுத்த பின், அதனடிப்படையில், ஒவ்வொரு வார்டிலும் சமச்சீராக வாக்காளர்கள் இருக்கும் வகையில், 150 வார்டுகள் உருவாக்க, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கான வேலைகள் விரைவில் துவங்க இருக்கின்றன.மாநகராட்சியில், 15 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் இருப்பதால், தலா 10 ஆயிரத்தில் இருந்து, 15 ஆயிரம் வாக்காளர்கள் என கணக்கிட்டு, 150 வார்டுகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியை துவக்கும் முன், நகரையொட்டியுள்ள மேலும் பல உள்ளாட்சிகளிலும் மக்கள் கருத்துக்கேட்பு நடத்தி, அவற்றையும் இணைக்க வேண்டும். அதை செய்த பின், தேவைப்பட்டால், 160 வார்டுகளாகவும், எண்ணிக்கையை உயர்த்தி, மாநகராட்சியை விரிவாக்கம் செய்யலாம்.விமான நிலைய விரிவாக்கம், குடிநீர் திட்டம், மெட்ரோ ரயில், ரோடு விரிவாக்கம், பை-பாஸ் உள்ளிட்ட பெரும்பாலான திட்டங்களுக்கு, மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. அதை கருத்தில் கொண்டு, கோவை மாநகராட்சியின் புதிய விரிவாக்கத்துக்கு தமிழக அரசு.

-சுரேந்தர்.

Comments