திரளான பக்தர்கள் கூட்டத்தோடு பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது!!

   -MMH 

    கோவை மாவட்டம் பேரூரில் பிரசித்திப்பெற்ற பட்டீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா 10 நாட்கள் உற்சவமாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மாலை யாகசாலை பூஜையும், மலர் பல்லக்கு நிகழ்ச்சியும் நடந்தது. 

மேலும் தினமும் காலைதோறும் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடந்தது.

நேற்று முன்தினம் இரவு சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதைத்தொடர்ந்து, சுவாமி, வெள்ளை யானை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று காலை தேர்த்திருவிழா நடந்தது. அதன்படி காலை 8.30 மணிக்கு பட்டாடை, அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட பட்டீசுவரர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளினர். முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி மாலை 4.30 மணிக்கு நடந்தது. 

இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். சிறுவாணி ரோடு மற்றும் ரத வீதிகள் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் தேர்கள் அசைந்தபடி நிலையை அடைந்தன. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments