மாணவர்களுடன் தரையில் அமர்ந்து சத்துணவு சாப்பிட்ட தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்!!

 -MMH 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனைக்கு சென்றார். அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்ய சென்றபோது, மாணவர்கள் சத்துணவு சாப்பிட தயாராக இருந்தனர். அதை பார்த்த கலெக்டர், மாணவர்களுடன் தானும் தரையில் அமர்ந்து சத்துணவு சாப்பிட்டார்.

அப்போது அவர், தினமும் பரிமாறப்படும் உணவு குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். உணவில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதுகுறித்து உடனடியாக ஆசிரியர்கள், அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தினார்.

மேலும், கலெக்டர் செந்தில்ராஜ் மாணவர்களிடம் கூறுகையில், ‘‘தமிழக முதல்-அமைச்சர் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்காக ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை உருவாக்கி உள்ளார். இந்த திட்டத்தின் மூலம் பள்ளி மாணவ-மாணவிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நீங்கள் அரசு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். தன்னிறைவு பெற்ற மாணவர்களாக திகழ வேண்டும். ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

‘நான் முதல்வன்’ திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் மாலை நேரத்தில் உங்கள் கிராமத்தில் உள்ள குறைபாடுகள், உங்களை சுற்றி உள்ள குறைபாடுகளை எழுதி பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை பள்ளி நிர்வாகம் என்னிடம் சமர்ப்பிக்கும். நீங்கள் கூறும் குறைபாடுகள் சரியாக இருந்தால், அதனை நான் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

முன்னதாக, பசுவந்தனை பஞ்சாயத்து அலுவலகத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். அங்குள்ள பதிவேடுகளை பார்வையிட்ட அவர், வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளுக்கு மாதாந்திர கட்டணம் முறையாக வசூலிக்க வேண்டும். அவ்வாறு செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு பஞ்சாயத்து தலைவர் லட்சுமி சிதம்பரத்துக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு செய்த கலெக்டர், அங்கு பொருட்கள் இருப்பு, வினியோகம் குறித்து கடை விற்பனையாளரிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு திட்டம்) சிதம்பரம், ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, மண்டல துணை தாசில்தார் ஆனந்த், வட்ட வழங்கல் அலுவலர் அறிவழகன், யூனியன் ஆணையாளர் வெங்கடாசலம், தலைமை ஆசிரியர் முத்துவிநாயகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-வேல்முருகன், தூத்துக்குடி.

Comments