இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து செயினை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!!

   -MMH 

   கோயம்புத்தூரில் இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து சென்று, செயினை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளன.

கோயம்புத்தூர்: இருகூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த இளைஞர்கள் அவரது கழுத்திலிருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை சிங்காநல்லூர் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்‌. அதில் அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் சங்கிலி பறித்து செல்வது பதிவாகி இருந்தது. சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.

இந்தநிலையில் மசக்காளிபாளையம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான வகையில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி விசாரித்தனர். அப்போது இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், இருவரையும் சிங்காநல்லூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் கோயம்புத்தூர் பி‌.என்.புதூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பதும், நண்பர்களான இருவரும் பல்வேறு இடங்களில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இருகூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்று செயின் பறிப்பில் ஈடுபட்டதும், இருவரும் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு உள்ளிட்ட வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்த 6 சவரன் மதிப்பிலான 2 தங்க செயின்களுடன், இருசக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

-சுரேந்தர்.

Comments