அனைத்து துறைகளிலும் பெண்கள் அதிக அளவில் சாதித்து வருவதாக இயற்கை விவசாய பாட்டி பத்மஸ்ரீ பாப்பம்மாள்!!

   -MMH 

   கோவை: தற்போது அனைத்து துறையிலும் பெண்கள் அதிக அளவில் சாதித்து வருவதாக கோவையை சேர்ந்த இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மாள் தெரிவித்துள்ளார்.

கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள பி.பி.ஜி.கல்லூரியில் மகளிர் தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகளிர் மேம்பாட்டு குழு சார்பாக நடைபெற்ற இவ்விழாவில் கலை, அறிவியல், செவிலியர், மேலாண்மை, பொறியியல் என அனைத்து துறை மாணவிகளும் கலந்து கொண்டனர். 

பி.பி.ஜி கல்வி குழுமங்களின்  தலைவர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இதில் கல்லூரி தாளாளர் சாந்தி தங்கவேலு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கோவை தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்த நூறு வயதை கடந்த இயற்கை விவசாய பாட்டி பத்மஸ்ரீ பாப்பம்மாள் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,கடந்த காலங்களில் பெண்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவும்,ஆனால் தற்போது அனைத்து துறைகளில் பெண்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதாக குறிப்பிட்ட அவர், இதனை பயன்படுத்தி, அனைத்து துறைகளிலும் பெண்கள் அதிக அளவில் சாதித்து வருவதாக குறிப்பிட்டார். 

விழாவில் மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் முத்துமணி,மகளிர் மேம்பாட்டு குழு தலைவர் யசோதா உட்பட மாணவிகள், பேராசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments