சமூக வலைதளத்தில் பணம் கட்டி ஏமாந்த தனியார் நிறுவன மேற்பார்வையாளர்! சைபர் கிரைம் போலீசார் விசாரணை!!

   -MMH 

   சமூக வலைதளத்தில் 'லிங்க்' அனுப்பி டிபாசிட் பணம் வசூலித்து 13 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்களை, கோவை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.கோவை நீலிக்கோனாம்பாளையத்தை சேர்ந்தவர் குமணன், 35. தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்க்கிறார். இவருக்கு, சமூக வலைதளத்தில், முன்பின் அறிமுகம் இல்லாத போன் எண்ணில் இருந்து ஒரு மெசேஜ் வந்தது.

'உங்கள் முதலீட்டுக்கு அதிக இன்சென்டிவ் கிடைக்கும்' என்று தகவலுடன் இணைய இணைப்பும் இருந்தது. இந்த இணைய இணைப்பை குமணன் 'கிளிக்' செய்தார். அந்த இணையதளத்தில், 'மருத்துவ உபகரணங்கள் குத்தகைக்கு விடும் தொழிலில் முதலீடு செய்வோருக்கு கணிசமான ஊக்கத்தொகை, முதலீட்டுத்தொகையுடன் 60 நாட்களில் வழங்கப்படும்' என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

அதை நம்பி, கடந்தாண்டு நவ., 23ம் தேதி முதல் டிசம்பர் 24ம் தேதி வரை, வெவ்வேறு நாட்களில் 12 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் குமணன் அந்த இணையதளம் மூலம் செலுத்தியுள்ளார்.குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு, கணிசமான தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர் காத்திருந்தார். ஆனால், 60 நாட்கள் ஆனபிறகும், அவருக்கு உறுதி அளித்தபடி ஊக்கத்தொகை வரவில்லை. அவர் செய்த முத லீட்டுத்தொகையும் கிடைக்கவில்லை.தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர், கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இன்ஸ்பெக்டர் தண்டபாணி அவர்கள் விசாரிக்கிறார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments