கோர்ட் உத்தரவால் கோவை ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி!!

   -MMH

   ஓட்டல்கள், உணவுக் கடைகள் மற்றும் பேக்கரிகள் மூடும் நேரத்தை உரிமையாளர்கள் அவரவர் வசதிக்கு ஏற்ப நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால், கோவை மாநகரம் துாங்கா நகரமாக மாற உள்ளது.

கோவை மாவட்ட ஓட்டல்கள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. இதில்பங்கேற்ற ஓட்டல்கள் உரிமையாளர்கள் சங்க செயலாளர் சிவக்குமார் கூறியதாவது:

கோவையில் ஓட்டல்கள் மூடுவது குறித்த, நேர கட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓட்டல்கள் சரி வர செயல்படவில்லை.

இதனால் உணவக உரிமையாளர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இனி வரும் காலங்களில் இந்த நிலை தொடரக்கூடாது. உணவகங்கள்மற்றும் ஓட்டல்கள் மூடும் நேரத்தை, உரிமையாளர்கள் அவரவர் வசதிக்கேற்ப நிர்ணயம் செய்து கொள்ளலாம் என, சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்டம் -ஒழுங்கு பிரச்னை என்ற பெயரில், ஓட்டல்கள் மற்றும் உணவுகடைகளின் வேலை நேரத்தை போலீசார் தீர்மானிக்கவோ, மூட சொல்லவோ கூடாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை அமல்படுத்தினால், மாவட்டத்தில் உள்ள பல ஆயிரம் ஓட்டல் உரிமையாளர்கள், ஊழியர்கள் பயனடைவார்கள். எனவே கோவை மாநகர போலீசார் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.சங்கத்தின் துணை தலைவர் பாலசந்தர் மற்றும் பொருளாளர் கோவிந்த்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப் கோவை.

Comments