அரசு பள்ளி மாணவர்களிடையே கோஷ்டி மோதல்! வாலிபர் கொலை முயற்சி !! - சிறுவர் உட்பட ஐந்து பேர் கைது!!

 -MMH 

   சென்னை வேளச்சேரி அருகே நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (21). இவர் கோவிலம்பாக்கம், சத்யாநகர், 3வது தெருவில் ஒரு தனியார் பிளைவுட் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு விஷ்ணு கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், விஷ்ணுவை கத்தியால் சரமாரி வெட்டி கொல்ல முயன்றது. இதில் விஷ்ணு படுகாயங்களுடன் அலறியபடி மயங்கி விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து கடைக்காரர்கள் ஓடிவந்தனர். இதை பார்த்ததும் 5 பேர் கும்பல் தப்பி சென்றது. தகவலறிந்த பள்ளிக்கரணை போலீசார், விஷ்ணுவை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இப்புகாரின்பேரில் பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் 5 பேர் கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக நேற்று மாலை கோவிலம்பாக்கம் சோலையப்பன் (19), சந்தோஷ்குமார் (20), சக்திவேல் (19), ஆதம்பாக்கம் மணிமாறன் (19) மற்றும் 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் ஆகிய 5 பேரும் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், கோவிலம்பாக்கம் மற்றும் நன்மங்கலம் அரசு பள்ளி மாணவர்களிடையே அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்படுவது வழக்கம். இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் நன்மங்கலத்தை சேர்ந்த விஷ்ணு, அப்பகுதி மாணவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். இதனால் கோவிலம்பாக்கத்தை சேர்ந்த சிலர் விஷ்ணுவை கொலை செய்ய திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. 5 பேரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 4 பேரை புழல் சிறையிலும், கைதான சிறுவனை சென்னை கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர். 

-கார்த்திகேயன் தண்டையார் பேட்டை.

Comments