வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் சுருட்டல்! மோசடி ஆசாமி கைது!!

   -MMH 

   கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஆதித்யன் (வயது 32). எம்.பி.ஏ. பட்டதாரி. ஆதித்யன் சிறு தொழில் நிறுவனங்கள் தொடங்குவது குறித்து தொழில் முனைவோர்களுக்கு ஆலோசனை வழங்கி வந்து உள்ளார். மேலும் தொழில்கள் மேம்பாடு மற்றும் விரிவாக்கத்திற்கும் ஆலோசனை வழங்கி வந்தார். மேலும் அவர், தனக்கு தெரிந்த இங்கிலாந்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு ஆட்கள் தேவைப்படுவதாக தனக்கு தெரிந்த நண்பர்களிடம் கூறி உள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அவர் விளம்பரபடுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனை நம்பிய இளைஞர்கள் பலர், அவரிடம் சென்று தங்களுக்கு இங்கிலாந்து நிறுவனத்தில் வேலை வாங்கி தரும்படி கூறியுள்ளனர். 

இதையடுத்து ஆதித்யன் அவர்களிடம்விசா, போக்குவரத்து செலவினம், தங்குமிடம் உள்ளிட்டவற்றிற்காக ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை  வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை நம்பிய கோவை ஐ.டி. ஊழியர்கள் கார்த்திக் (26), பிரபாகரன் (27) ஆகிய இருவரும் மொத்தம் ரூ.38 லட்சத்தை ஆதித்யனிடம் வழங்கி உள்ளனர்.

இந்த நிலையில் ஆதித்யன் அவர்களிடம் கூறியது போல் வேலை வாங்கி தரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஐ.டி. ஊழியர்கள் இருவரும் தங்களது பணத்தை திருப்பி தரும்படி கேட்டனர். ஆனால் அவர் பணத்தை தராமல் தலைமறைவாகி விட்டார். 

இதையடுத்து ஐ.டி. ஊழியர்கள் கோவை மாநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில் ஆதித்யன் இதுவரை பல்வேறு இளைஞர்களிடம் ரூ.38 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஆதித்யனை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments