கோவை மாநகராட்சியில், ஏற்கனவே 2008ம் ஆண்டில் சொத்துவரி உயர்த்தப்பட்டதால், இப்போதைய சொத்துவரி உயர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது!!

 

-MMH

      கோவை மாநகராட்சியில், ஏற்கனவே 2008ம் ஆண்டில் சொத்துவரி உயர்த்தப்பட்டதால், இப்போதைய சொத்துவரி உயர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.தமிழகம் முழுவதும் சொத்துவரியை உயர்த்தி, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி, 600 சதுரஅடி பரப்புள்ள குடியிருப்புகளுக்கு 25 சதவீதமும், 600லிருந்து 1,200 சதுரஅடி வரையிலான பரப்புள்ள குடியிருப்புகளுக்கு 50 சதவீதமும், 1201 லிருந்து 1800 சதுரஅடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 75 சதவீதமும், அதற்கு மேலான பரப்புள்ள குடியிருப்புக்கு, 100 சதவீதமும் சொத்துவரி உயர்த்தப்படுகிறது.சென்னையை விட உயரும் அபாயம்இது சென்னை மாநகராட்சிக்கு நிர்ணயித்துள்ள சொத்துவரி உயர்வை விடக் குறைவாக இருந்தாலும், இந்த அளவில் சொத்து வரி உயரும்போது, சென்னையை விட சொத்துவரித்தொகை உயரும் வாய்ப்புள்ளது. ஏனெனில், சென்னையில் 1998க்குப் பின் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. 

ஆனால் கோவையில் 2008ல் இதே தி.மு.க., ஆட்சியில், ஒரு முறை சொத்துவரி உயர்த்தப்பட்டது.அப்போது உரிமையாளர் அல்லது வாடகைதாரர் யார் குடியிருந்தாலும், அந்த குடியிருப்புக்கு 25 சதவீதமும், தொழிற்சாலை கட்டடங்களுக்கு 100 சதவீதமும், வணிக கட்டடங்களுக்கு 150 சதவீதமும் சொத்து வரியை மாநகராட்சி உயர்த்தியது. அதன்பின், 2018ல் ஐகோர்ட் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி உயர்த்த நடவடிக்கை எடுத்தபோது, கோவையிலும் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.ஆனால் சென்னையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னும், கோவையில் பத்தாண்டுகளுக்குப் பின்னும் சொத்துவரி உயர்த்தப்படும் நிலையில், இரண்டுக்கும் ஒரே மாதிரி உயர்த்துவதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அதிலும் ஒரு கொடுமையாக, வாடகைக்கு விடப்பட்ட குடியிருப்புகளுக்கு, வணிகக் கட்டடத்துக்கு இணையாக, 100 சதவீதம் வரி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சட்டரீதியாகவும், களத்திலும் பலர் போராடத் தயாரான நிலையில், அந்த சொத்து வரி உயர்வை, அப்போதைய அ.தி.மு.க., அரசு நிறுத்தி வைத்தது. இந்நிலையில்தான், 14 ஆண்டுகளுக்குப் பின், கோவையில் சொத்து வரி உயர்த்தியிருப்பதை எதிர்த்து, அ.தி.மு.க.,வும் போராட்டத்தில் குதித்துள்ளது. இதில், தி.மு.க.,வைப் போலவே, அ.தி.மு.க.,வும், பாரபட்சமாக நடப்பதாக புகார் எழுந்துள்ளது.சென்னையில் 24 ஆண்டுகளுக்குப் பின், ஐகோர்ட் உத்தரவிட்டு பல ஆண்டுகளுக்குப் பின் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

ஆனால் கோவைக்கு அது போன்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை. குரல் கொடுக்க கோரிக்கைஎனவே, கோவை மாநகராட்சிக்கு தற்போதைய சொத்துவரி உயர்விலிருந்து விலக்கு அளிக்க, எம்.எல்.ஏ.,க்களும், கவுன்சிலர்களும் வலியுறுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.அதேபோன்று, எல்லாக் கட்டடங்களுக்கும் ஒரே மாதிரியான வரி விதிக்காமல், கட்டடத்தின் வயது, தன்மை, மதிப்புக்கேற்ப சொத்துவரி விதிக்க வேண்டுமென்று, பல தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.கடன் சுமையிலிருந்து மீளவும், வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றவும், உள்ளாட்சிகளின் வருவாயை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம்; அதற்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் சொத்து வரி சீராய்வு செய்வதும் அவசியம். அது, எல்லா மாநகர மக்களுக்கும் சமமாக இருக்க வேண்டும். சென்னைக்கு வெண்ணெய்; கோவைக்கு சுண்ணாம்பு என்று பாரபட்சம் வேண்டாமென்பதே, இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பு.

-சுரேந்தர்.

Comments