உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு! தரமற்ற உணவு பொருட்களை விநியோகம் செய்தவர்களுக்கு அபராதம்!!

   -MMH 

   கோவை மாவட்டத்தில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்தவர்களிடம் இருந்து, ரூ.1.15 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆகவே, வெளியிடங்களில் உணவு உட்கொள்ளும் பொதுமக்கள், மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சமீரன் அவர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் செயல்படும் உணவு சார்ந்த வணிக நிறுவனங்கள் அனைத்தும் உணவு பாதுகாப்பு தரம் சட்டத்தின் கீழ், உரிமம் அல்லது பதிவு செய்திருக்க வேண்டும். அவற்றை உரிய நேரத்தில் புதுப்பித்திருக்க வேண்டும். மாவட்டத்தில், 35 கோவில் அன்னதானக் கூடங்களுக்கு பி.எச்.ஓ.ஜி., தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

1,406 அங்கன்வாடி ஊழியர்கள், உணவு மைய ஒருங்கிணைப்பாளர்கள், 540 பேருக்கு பயிற்சிக்கு பின் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, 23 அங்கன்வாடி மையங்களுக்கு 'ஈட் ரைட் கேம்பஸ்' சான்றிதழ் வழங்கப்பட்டது. தினசரி சமைக்கப்படும் உணவுகளின், 250 கிராம் மாதிரி எடுத்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை, 4,477 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதில், 859 சிவில் வழக்குகள் தொடரப்பட்டு, அதில், 753 வழக்குகளில், ரூ.81 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 616 கிரிமினல் வழக்குகளில், 165 வழக்குகளில் தண்டனையுடன், ரூ.34.45 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த, 448 சில்லரை விற்பனையாளர்களுக்கு, ரூ.22.90 லட்சம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய, 135 உணவு வணிகர்களுக்கு, ரூ.2.70 லட்சம்அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், 354 நிறுவனங்களுக்கு சுகாதார தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

கூட்டத்தின் முடிவில், பி.எச்.ஓ.ஜி., தரச்சான்று பெற்ற கோவில்களுக்கு, சான்றிதழ்கள், வ.உ.சி., பூங்கா பகுதிக்காக பெறப்பட்ட, 'கிளீன் ஸ்ட்ரீட் புட் ஹப்' தரச்சான்று அப்பகுதி தள்ளுவண்டி, நடமாடும் உணவு வணிகம் செய்யும் வணிகர்களிடம் வழங்கப்பட்டது. கூட்டத்தில், உணவுப்பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments