சித்திரை விஷு பண்டிகையையொட்டி கோவையில் பூக்கள், பழங்களின் விலை உயர்வு! பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது!!

   -MMH 

   சித்திரை மாதம் பிறப்பதையொட்டி கேரள மக்கள் வெள்ளிக்கிழமை சித்திரை விஷு பண்டிகையாகவும், சித்திரைக்கனி திருவிழாவாகவும் கொண்டாடுகிறார்கள். 

தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள். விஷுவையொட்டி பூக்களை வைத்து கோலமிடுவதிலும், பழங்களை வைத்து வழிபடுவதிலும் கோவையில் உள்ள கேரள மக்கள் ஆர்வமாக உள்ளனர். 

இதையொட்டி கோவை பூ மார்க்கெட், பழ மார்க்கெட்டுகளில்  பூ மற்றும் பழங்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. 

இதனால் பூக்கள் மற்றும் பழங்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. இருந்தபோதிலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பழங்கள் மற்றும் பூக்களை வாங்கிச்சென்றனர். 

இதுகுறித்து பூ மார்க்கெட் வியாபாரி ஆஸாத் கூறும்போது, சித்திரை விஷுவையொட்டி பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. 

மல்லி கிலோ ரூ.500-ல் இருந்து ரூ.800 ஆகவும், முல்லை ரூ.600-ல் இருந்து ரூ.1000 ஆகவும், ஜாதிமல்லி ரூ.800-ல் இருந்து ரூ.1000 ஆகவும், பட்ரோஸ் ரூ.100-ல் இருந்து ரூ.160 ஆகவும், ரோஜா 15 பூ கட்டு ரூ.120-ல் இருந்து ரூ.160 ஆகவும் உயர்ந்து உள்ளது என்றார். 

கோவை மொத்த பழ மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் முகமது ரபி கூறியதாவது:-

"மாம்பழம் சாதாரண ரகம் கிலோ ரூ.80-ல் இருந்து ரூ.100 ஆகவும், பலாப்பழம் கிலோ ரூ.35-ல் இருந்து ரூ.50 ஆகவும், ஆரஞ்சு ரூ.80 ஆகவும், திராட்சை ரூ.70 ஆகவும், ஆப்பிள் ரூ.200 ஆகவும் விலை உயர்ந்து உள்ளது. 

சித்திரைக்கனிக்கு பொதுமக்கள் ஆர்வமாக வாங்கும் கனிக்காய் என்ற மஞ்சள் வெள்ளரி ஒன்று ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சில்லரை கடைகளில் இந்த பழங்களின் விலை 35 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. மாதுளை அதிகபட்சமாக கிலோ ரூ.200-க்கு விற்பனையானது." இவ்வாறுஅவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர். 

-சி.ராஜேந்திரன்.

Comments