அன்னுார் நகரில் தொடர்ந்து மூன்று நாட்கள் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்!!

   -MMH 

   அன்னுார் நகரில் தொடர்ந்து மூன்று நாட்கள் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால், அன்னுார் நகரில் வாகன போக்குவரத்து அதிகரித்தது. கோவை- சத்தி வழித்தடத்திலும், மேட்டுப்பாளையம்- அவிநாசி வழித்தடத்திலும், தினமும் பல ஆயிரம் வாகனங்கள் இயங்கின.

இதனால் கடந்த 14ம் தேதி முதல் நேற்று முன்தினம் இரவு வரை மூன்று நாட்கள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு கவலைக்கிடமான நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வந்த ஆம்புலன்ஸ் கோவை ரோட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, 10 நிமிடங்களுக்கு பிறகே அங்கிருந்து செல்ல முடிந்தது. மூன்று நாட்களாக கோவை ரோட்டில் இரண்டு கி.மீ., தொலைவில் அச்சம்பாளையம் பிரிவு வரையும், சத்தி ரோட்டில் பழைய தாலுகா அலுவலகம் வரையும், வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அவிநாசி ரோட்டில், சோமனுார் பிரிவு வரை வாகனங்கள் நின்றன. கோவை மற்றும் அவிநாசி பஸ்களில் வந்தவர்கள் நீண்ட நேரம் பஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் இறங்கி நடந்து சென்றனர்.இதுகுறித்து அன்னுார் மக்கள் கூறியதாவது:அன்னுார் நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

சாலையை ஒட்டியுள்ள மின்கம்பங்களை உள்புறமாக நகர்த்தி நடவேண்டும். கூடுதலாக போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும். குளக்கரை ரோட்டை பலப்படுத்த வேண்டும். மாற்றுப்பாதைகள்சத்தி ரோட்டில் இருந்து இட்டேரி ரோடு வழியாக அவிநாசி ரோட்டுக்கு, மாற்றுப்பாதையை அமைக்க வேண்டும். கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்களை கரியாம்பாளையத்தில் திருப்பிவிட வேண்டும். அவிநாசியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்களை அன்னுாருக்கு வடக்கே உள்ள இட்டேரி ரோடு வழியாக திருப்பி விட வேண்டும்.அன்னுார் கடை வீதி மற்றும் ஓதிமலை ரோடு பகுதியில் நான்கு சக்கர வாகனங்களை பார்க்கிங் செய்ய அனுமதிக்காமல் தொலைவில் நிறுத்தும்படி செய்ய வேண்டும். போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் பேரூராட்சி இணைந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கு முத்தரப்பு கூட்டம் நடத்தி அதில் உரிய முடிவுகள் எடுத்து செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, பொதுமக்கள் தெரிவித்தனர்.

-சுரேந்தர்.

Comments