பி.ஏ.பி., வாய்க்காலில் முறைகேடாக தண்ணீர் எடுத்த விவசாயிகளின் மின் இணைப்புகளை துண்டிக்க, அதிகாரிகள் நடவடிக்கை!!

   -MMH 

   சூலூர்:பி.ஏ.பி., வாய்க்காலில் முறைகேடாக தண்ணீர் எடுத்த, 27 விவசாயிகளின் மின் இணைப்புகளை துண்டிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் (பி.ஏ.பி.,), கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 3.77 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது. விவசாயிகளின் நலன் கருதி, விவசாய நிலங்கள், நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படுகிறது. தற்போது, முதல் மண்டலத்துக்கு, நான்காவது சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.சுல்தான்பேட்டை ஒன்றியத்தில், 15 ஆயிரத்து, 600 ஏக்கர் நிலம், பி.ஏ.பி., பாசனத்தில் பயன் பெறுகிறது. இதன்மூலம், தென்னை, காய்கறிகள் மற்றும் மக்காச்சோள சாகுபடி நடக்கிறது. 

பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விட்டுள்ள நிலையில், சட்ட விரோதமாக தண்ணீர் திருடப்படுகிறதா என, அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் ஆய்வு செய்தனர். கோவை மாவட்ட, பி.ஏ.பி., கூட்டு கண்காணிப்பு குழுவை சேர்ந்த சூலூர் தாசில்தார் சகுந்தலாமணி, மின்வாரிய செயற்பொறியாளர் பாலமுரளி, பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் ஆதிசிவன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், மலைப்பாளையம், பூராண்டாம்பாளையம், குமாரபாளையம் பகுதிகளில், பல விவசாயிகள் முறைகேடாக தண்ணீர் எடுத்து வந்ததை கண்டுபிடித்தனர். விவசாய மின் இணைப்பு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின் இணைப்பை பயன்படுத்தி, 27 விவசாயிகள் முறைகேடாக தண்ணீர் எடுத்து வருவதை உறுதி செய்தனர். இதையடுத்து, அவர்களின் மின் இணைப்புகளை துண்டிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,' பி.ஏ.பி., வாய்க்காலில் மோட்டார் வைத்து சட்டவிரோதமாக தண்ணீர் திருடினால், பாரபட்சமின்றி உடனடியாக, மின் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது, சட்டப்படி வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

-சுரேந்தர்.

Comments