கோவை-துாத்துக்குடி தொழிற்தட துறைமுகச்சாலை அறிவிப்பு வெளியிடப்பட்டது!!

   -MMH 

   கோவை, திருப்பூர் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில், கோவை-துாத்துக்குடி தொழிற்தட துறைமுகச்சாலை அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது, கொங்கு மண்டல தொழில் முனைவோரிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, பொருளாதாரம், வேலை வாய்ப்பில் கோவை, திருப்பூரை உள்ளடக்கிய கொங்கு மண்டலம்மிக முக்கியப் பங்காற்றி வருகிறது.

நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூர் 20வது இடத்தையும், கோவை 29வது இடத்தையும் பிடித்துள்ளன.இவ்விரு மாவட்டங்களில் இருந்தும் கடந்த ஆண்டில், ஏப்ரல்-செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் 27 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தியாகும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு, துாத்துக்குடி அல்லது கொச்சி துறைமுகம் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ரூ.4 கோடி நிதிசாலை வழியாக துாத்துக்குடி செல்வதில் தற்போதுள்ள சிரமங்களை தவிர்க்கும் நோக்கத்துடன், கோவை -துாத்துக்குடி தொழிற்தட துறைமுகச்சாலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டல தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், ஏற்றுமதி வர்த்தகத்தை மேலும் அதிகரிக்கவும், இந்த திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.இதற்கு சாத்தியக்கூறு உள்ளிட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு, நான்கு கோடி ரூபாய் நிதியையும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. டெண்டர் விடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.கோவை, பொள்ளாச்சி, பழனி, ஆத்துார், காரியாபட்டி வழியாக துாத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் தொழிற்தடதுறைமுக சாலை நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் பெரும்பாலான பகுதிகள், தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால் அவற்றையும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.வரவேற்பு... எதிர்பார்ப்பு...துாத்துக்குடி துறைமுகத்தை, தொழிற்சாலைகள் நிறைந்துள்ள கோவை, திருப்பூர் நகரங்களுடன் இணைப்பதால் மேற்கு தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகும் என்று இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான காரணத்தையும் அரசு விளக்கியுள்ளது. இந்த அறிவிப்பு, மேற்கு மாவட்ட தொழில் துறையினரிடம் மிகுந்த வரவேற்பையும், பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த வழித்தடத்தில், என்.எச்.209 (புதிய எண்: 83) மற்றும் என்.எச்.,7 (புதிய எண்:44) ஆகிய இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் இணைகின்றன. அவற்றைத் தவிர்த்துள்ள 85 கி.மீ., துாரத்துக்கு நான்கு வழிச்சாலை அமைப்பதற்கே, தற்போது விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.அரசின் அறிவிப்பில் இதிலுள்ள தேசிய நெடுஞ்சாலையும் மேம்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே உள்ள நான்கு வழிச்சாலைகளை தவிர்த்து, பொள்ளாச்சி-பழனி-ஒட்டன்சத்திரம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய, தமிழக அரசு நிதி ஒதுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்தட துறைமுகச்சாலை, தொழில் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, கொங்கு மண்டலத்திலுள்ள தென் மாவட்ட மக்களுக்கும் பெரிதும் உதவும் என்பது நிச்சயம்.

-சுரேந்தர்.

Comments