நீண்ட நாட்களுக்கு பிறகு நேரு ஸ்டேடியத்தில் மாணவ, மாணவிகளுக்கான தடகளம் மற்றும் குழு போட்டிகள் நடந்தது!!

    -MMH 

   கோவை : நீண்ட நாட்களுக்கு பிறகு நேரு ஸ்டேடியத்தில் நடந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளம் மற்றும் குழு போட்டிகளில், வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர். அறம் பவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட், எச்.சி.எல்., பவுண்டேஷன் சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கான தடகளம் மற்றும் குழு போட்டிகள், நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தன. இதில், 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 14 வயது மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான 60மீ., ஓட்டம், உயரம் தாண்டுல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கபடி, பேட்மின்டன், கேரம், செஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு, தடகளம் மற்றும் குழுப்போட்டிகள் நடத்தப்பட்டதால், அரசு பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று, தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்த மாணவர்கள், மாநில போட்டிக்கு தேர்வாகினர்.

-சுரேந்தர்.

Comments