மேட்டுப்பாளையம்-நெல்லை ரெயில் கிணத்துக்கடவில் நின்று செல்லுமா? தென்மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு!!

-MMH

 கோடை சீசனை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7:45 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கோவையில் இருந்து போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக நெல்லைக்கு செல்கிறது. 

இந்த நிலையில் கிணத்துக்கடவு பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்லூரிகள் உள்ளன. இங்கு தங்கியிருந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் படிக்கும் மாணவ-மாணவிகளில் ஏராளமானோர் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் கிணத்துக்கடவில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி பகுதிகளுக்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. 

இதற்கு காரணம், கோவையில் இருந்து வரும் பஸ்கள் கிணத்துக்கடவு ஊருக்குள் வந்து பயணிகளை ஏற்றி செல்வது இல்லை. அவை மேம்பாலம் வழியாக சென்றுவிடுகின்றன. தனியார் பஸ்கள் கூட முன்பதிவு இருந்தால் மட்டுமே ஊருக்குள் வருகின்றன. மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் தென்மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

மேலும் அவர்கள் கிணத்துக்கடவு வழியாக ரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் தற்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கிணத்துக்கடவு வழியாக நெல்லைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. ஆனால் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் நிற்பது இல்லை. இதனால் அவர்கள் கைக்கு எட்டியும், வாய்க்கு எட்டவில்லை என்ற தவிப்பில் உள்ளனர். 

இதுகுறித்து தென்மாவட்ட மக்கள் கூறியதாவது:-பல கோடி ரூபாய் செலவில் கிணத்துக்கடவில் புதிய ரெயில் நிலையம் நவீன முறையில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. அகல ரெயில் பாதையாக மாற்றுவதற்கு முன்பு இந்த வழித்தடத்தில் ராமேசுவரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ெரயில்கள் இயக்கப்பட்டு வந்தது.  தற்போது அகல ரயில் பாதையாக மாற்றிய பிறகு கோவையில் இருந்து போத்தனூர் வழியாக பொள்ளாச்சி, பழனிக்கு மட்டுமே ரயில் போக்குவரத்து தொடங்கி உள்ளது. 

ஏற்கனவே இயங்கி வந்த ராமேசுவரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களை இயக்காமல் கிணத்துக்கடவு பகுதி மக்களின் நலனை புறக்கணிக்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.  தற்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் ரயில் கூட கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்வது கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே அந்த ரயிலாவது நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments