புனித வெள்ளியையொட்டி கோவையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை!!

   -MMH 

    உலக மக்களின் பாவங்களை போக்க இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டு மரித்து, 3-ம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் கடை பிடித்து வருகிறார்கள்.

புனித வெள்ளியன்று அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடத்தி, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது பேசிய 7 வார்த்தைகள் மற்றும் அவர் பட்டபாடுகள் குறித்து தியானிக்கப்படும். புனித வெள்ளி என்பதால் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

கோவை பெரியகடை வீதியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. 

இதில் முதன்மை குரு ஜான் ஜோசப், வட்டார முதன்மை குரு ஜார்ஜ் தனசேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். அப்போது சிலுவை பாதை வழிபாடு நடந்தது. இதில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் வரை, அவர் பட்டபாடுகள் குறித்து தியானிக்கப்பட்டது.

அப்போது கிறிஸ்தவர்கள் சிலுவையை கையில் பிடித்தபடி முட்டிப்போட்டு நடந்தபடி சென்றனர். மேலும் சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலமானது புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. 

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஒரு சிலர் பெரிய சிலுவைகளை தங்களது தோளில் தூக்கியபடி வந்தனர்.

மேலும் கோவை ராமநாதபுரம் உயிர்த்த இயேசு ஆண்டவர் ஆலயத்தில் பங்குகுரு அருள்உபகாரம், ஒண்டிபுதூர் புனித ஜோசப் ஆலயத்தில் பங்கு குரு ஆரோக்கியசாமி, கோவைப்புதூர் குழந்தை இயேசு ஆலயம், காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயம் உள்பட அனைத்து ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. 

மேலும் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் இயேசு கிறிஸ்து உருவ சிலைகள் துணியால் மூடப்பட்டு இருந்தன. இந்த சிறப்பு பிரார்த்தனையின் போது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு தொங்கியபோது பேசிய 7 வார்த்தைகள் தியானிக்கப்பட்டன. 

இந்த பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் அதிகாலையில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவைமாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments