பொள்ளாச்சியில் நடக்கும், தேசிய அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒவ்வொரு 'போர்டு' விளையாட்டும் விறுவிறுப்பாக நடக்கிறது!!

   -MMH 

   பொள்ளாச்சியில் நடக்கும், தேசிய அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வெற்றி வாகை சூடி வருகின்றனர். நான்காவது நாளான நேற்று, போட்டியை கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.

இன்டர்நேஷனல் மாஸ்டரான சென்னை வீரர் பரத் சுப்ரமணியம், இன்டர்நேஷனல் மாஸ்டர் ஸ்ரீஹரியிடம் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். சிறப்பாக விளையாடிய காஷ்மீரை சேர்ந்த ஷோகம் கம்மோட்ரா, அவினாஸ் ரமேஷை தோற்கடித்து வெற்றி பெற்றார். 8வது சுற்றில் இன்டர்நேஷனல் மாஸ்டர் ஸ்ரீஹரி, 7.5 புள்ளிகளுடன் தனி முன்னிலை வகிக்கும் காஷ்மீர் வீரர் ஷோகம் கம்மோட்ராவை எதிர்த்து விளையாடி வருகிறார். இரண்டாவது இடத்திலுள்ள இளம்பரிதி, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த கிருஷ்ணன் ரித்விக்குடன் விளையாடி வருகிறார். 5.5 புள்ளிகள் பெற்று, 5 பேரும், 5 புள்ளிகள் பெற்று, 13 பேரும் விளையாடி வருகின்றனர். பெண்கள் பிரிவில், 6வது சுற்றின் முடிவில், 6க்கு 6 புள்ளிகள் பெற்று தனி முன்னிலை வகித்த பாக்கியஸ்ரீ பாட்டீல், 7வது சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த கனிஷ்காவை தோற்கடித்தார். தற்போது 7 புள்ளிகளுடன், 8வது சுற்றில் ஐஷுவீ அகர்வாலை எதிர்த்து விளையாடி வருகிறார். 8வது சுற்றில், மகளிர் பிரிவில், 6 புள்ளிகள் பெற்று ஒருவரும், 5.5 புள்ளிகள் பெற்று 5 பேரும், 5 புள்ளிகள் பெற்று 8 பேரும் முன்னிலை பெற்று விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு வீரரும் நிதானமாக விளையாடி, தங்களுக்கான 'நகர்வு'களை தேர்வு செய்கின்றனர். இதனால், ஒவ்வொரு 'போர்டு' விளையாட்டும் விறுவிறுப்பாக நடக்கிறது.

-சுரேந்தர்.

Comments