குவி ஆடி கண்ணாடிகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை! நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை!!

   -MMH 

   பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் குவி ஆடி கண்ணாடிகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை!  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை!!

வால்பாறையில் சோலையார் அணை, கூழாங்கல் ஆறு, நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு, நீரார் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே ஆழியாறில் இருந்து வால்பாறை செல்வதற்கு மலைப்பாதை தொடங்குகிறது. இது சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் வரை கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இதனால் விபத்துகளை தடுக்கும் வகையில் வளைவில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதற்கு நெடுஞ்சாலைத்துறை மூலம் குவி ஆடி கண்ணாடிகள் வைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் விபத்துகள் தடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அந்த குவி ஆடி கண்ணாடிகளை சேதப்படுத்தி வருகின்றனர். மேலும் சிலர் அதன் மீது மோதி சேதத்தை ஏற்படுத்துகின்றனர். இவ்வாறு ஆழியாறில் இருந்து அட்டகட்டி வரை 5 இடங்களில் குவி ஆடி கண்ணாடி சேதமடைந்து இருந்தது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது .

இதைத்தொடர்ந்து உடைந்த கண்ணாடிகளை அகற்றி விட்டு புதிதாக குவி ஆடி கண்ணாடிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மாற்றினர். பின்னர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க குவி ஆடி கண்ணாடிகள் பொருத்தப்பட்டு உள்ளன. ஒரு குவி ஆடி கண்ணாடியின் விலை ரூ.5,300 ஆகும். கடந்த 6 மாதத்தில் 10 கண்ணாடிகள் வரை உடைக்ககப்பட்டு உள்ளது. தற்போது ஆழியாறில் இருந்து அட்டக்கட்டி வரை 5 கண்ணாடிகள் புதிதாக பொருத்தப்பட்டு உள்ளன. விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க குவி ஆடி கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன. அதை உடைப்பதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை சுற்றுலா பயணிகள் புரிந்து கொள்ள வேண்டும். 

வால்பாறை மலைப்பாதையில் விடுமுறை நாட்களில் ரோந்து பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. குவி ஆடி கண்ணாடிகளை சேதப்படுத்தும் நபர்கள் மீது போலீசில் புகார் கொடுத்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மலைப்பாதையில் வாகனங்களை இயக்கி போதுமான அனுபவம் உள்ளவர்கள் மட்டும் வாகனங்களை இயக்க வேண்டும். இதன் மூலம் விபத்துகளை தடுக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments