மோட்டார் பம்ப்செட் உற்பத்தியில் கோவையில் கவனம் தேவை!!

   -MMH 

   மோட்டார் பம்ப்செட் உற்பத்தி என்றாலே கோவைதான். நம் நாட்டில் உற்பத்தி ஆகும் பம்ப் செட்டுகளில் 60% கோவையில்தான் உற்பத்தியாகிறது.

பெரு நிறுவனங்களைத் தாண்டி, சுமார் 3,000 சிறு, குறு மற்றும் நடுத்தர பம்ப் உற்பத்தி மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் கோவையில் உள்ளன. கோவையில் தினசரி 25,000 முதல் 30,000 மோட்டார் பம்ப் செட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. தினசரி ரூ.40 - ரூ.50 கோடி வரை வியாபாரம் நடந்தது. இந்த எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கும் கீழே குறைந்துவிட்டது.

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி நெருக்கடிகளுக்கு மத்தியில் கொரோனா நோய்த் தொற்று மேலும் பெரிய நெருக்கடியைக் கொடுத்தது. தவிர, கோவைக்குப் போட்டியாக குஜராத்தில் விலை குறைவான மோட்டார் பம்ப் தயாரிக்கப் படுகிறது. மோட்டார் பம்புக்கு சில மூலப் பொருள்கள் வட இந்தியாவில் இருந்து தான் வரவேண்டும். பெட்ரோல், டீசல் விலை காரணமாக மூலப்பொருள்கள் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. ஆனால், விற்பனை விலையை அதற்கு ஏற்றாற்போல அதிகரிக்க முடியவில்லை. டிசம்பர் முதல் ஜூன் வரை மோட்டார் பம்புக்கான சீஸன். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தைவிட 20%கூட விற்பனை நடக்கவில்லை. பலர் இந்தத் துறையை விட்டு வேறு வேலைக்குத் செல்லத் தொடங்கிவிட்டனர்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந் தொழில்முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஜேம்ஸுடன் இது தொடர்பாக பேசினோம்.

'கோவையில் பல ஆண்டு காலமாக பம்ப் செட் உற்பத்தி செய்துவந்த பெரு நிறுவனங்கள், இடம் வாடகை, மின்சார சலுகை, கூலி அனைத்தும் குறைவு என குஜராத்துக்குப் போக ஆரம்பித்தன. மூலப்பொருள்களை அங்கேயே வாங்கி பம்ப்செட்டுகளை செய் வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று நினைத்ததும் இன்னொரு காரணம். இப்படிப் படிப்படியாக பல நிறுவனங்கள் குஜராத்தில் பம்ப் செட் தயாரிப்பில் இறங்கின. இதனால் குறைந்த விலைக்கு பம்ப் செட்டுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றன. குஜராத்தில் தயாராகும் பம்ப்செட்டுகளைவிட 20% அதிக விலைக்கு விற்றால்தான், கோவை உற்பத்தியாளர்களால் தாக்குப் பிடிக்க முடியும்.

பம்ப்பை உலகம் முழுக்கக் கொண்டு சென்றதில் கோவைக்குப் பெரும்பங்கு உள்ளது. தற்போது, குஜராத்தில் உற்பத்தியாகும் மோட்டார் கோவையில் விற்பனை ஆகிறது. 18% ஜி.எஸ்.டி வரி மிகப் பெரிய நெருக்கடியைத் தந்திருக்கிறது. மூலப் பொருள்களின் விலை 85 - 150% உயர்ந்துள்ளது. 80% குறு, சிறு நிறுவனங்கள் இப்போதும் பொது முடக்கக் காலகட்டத்தைப் போலத்தான் வேலை இல்லாமல் உள்ளன.

குறு, சிறு நிறுவனங்கள்தான் கோவை மாவட்டத்தின் முக்கிய அடையாளம். ஆனால், அதை வேகமாக இழந்துவருகிறோம். கொரோனா காலத்திலேயே 15% குறு சிறு நிறுவனங்கள் இந்தத் துறையில் இருந்து வெளியேறிவிட்டன. தி.மு.க அரசாங்கத்தின் மீது எங்களுக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதைப் பூர்த்தி செய்யும் வகையில் அவர்களின் செயல்பாடு இல்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. கோவையின் அடையாளத்தைத் தக்கவைக்க, தமிழக அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.

-சுரேந்தர்.


Comments