வாய்காலில் கழிவு நீர் கலப்பு விவசாயிகள் வேதனை! நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்!!

 

-MMH

   தொண்டாமுத்தூர் கீழ்சித்திரைச்சாவடி பகுதியில், சிலர் சட்டவிரோதமாக நீர்வழித்தடத்தில் உள்ள பாலத்தை உடைத்து துளையிட்டதால், வாய்க்காலில் கழிவுநீர் கலந்து வருகிறது.நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணையில் இருந்து, கீழ் சித்திரைச்சாவடி வாய்க்கால் பிரிந்து வருகிறது. இந்த வாய்க்காலால், வழியோர கிராமங்களில் உள்ள விளைநிலங்களுக்கு பாசன வசதி கிடைப்பதோடு, வேடபட்டி புதுக்குளம், கோளாரம்பதி, நரசாம்பதி உள்ளிட்ட குளங்களுக்கும், தண்ணீர் சென்றடைகிறது. இந்நிலையில், சுண்டப்பாளையம் பள்ளத்தில் இருந்து, மழைக்காலங்களில் வரும் வெள்ளம், கீழ்சித்திரைச்சாவடி பகுதியில், சூப்பர் பேசேஸ் எனப்படும் பழமையான பாலம் மூலம், நொய்யலாற்றுக்கு நீர் சென்றடைகிறது.

இந்த பாலத்தில், பள்ளத்தில் இருந்து நீர் நொய்யலாற்றுக்கு செல்லும் வகையிலும், பாலத்தின் கீழ், கீழ்சித்திரைச்சாவடி வாய்க்கால் நீர், குளத்துக்கு செல்லும் வகையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சுண்டப்பாளையம் பள்ளத்தில் கழிவுநீர் அதிகம் கலந்து வருவதால், சூப்பர் பேசேஸ் பாலம் பகுதியிலும், கழிவுநீர் தேங்கி வருகிறது. இந்நிலையில் சிலர் சட்டவிரோதமாக, சூப்பர் பேசேஸ் பாலத்தை உடைத்து துளையிட்டுள்ளனர். இதனால், கழிவுநீர் வாய்க்காலில் கலந்து வருகிறது. வாய்க்கால் நீர் மாசுபடுவதாக, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments