தரம் உயர்த்தப்படும் விமான நிலையம்! மேம்பாட்டு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு!!

   -MMH 

:   கோவை விமான நிலையத்தை 809 கோடி ரூபாயில் மேம்படுத்தும் திட்டத்துக்கு வடிவமைப்பு மற்றும் பொறியியல் ஆலோசகர் நியமிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. திட்டத்தின்படி, பல்வேறு நவீன அம்சங்களுடன் புது வானில் 'டேக் ஆப்' ஆகப்போகிறது, கோவை விமான நிலையம்.

கோவை சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் திட்டம் நீண்ட காலமாக இழுபறியாக இருந்து, தற்போது தான் வேகம் பிடித்துள்ளது. விரிவாக்கம் செய்ய தேவையான நிலம் 627 ஏக்கர். இந்த நிலம் கிடைத்தால் தான், தற்போதுள்ள 9760 அடி ஓடுபாதையை, 12 ஆயிரம் அடி நீளம் கொண்டதாக நீட்டிக்க முடியும்.அப்போது தான், கூடுதல் சரக்கு ஏற்றக்கூடிய பெரிய விமானங்கள் வந்து செல்ல வாய்ப்பாக அமையும். இதனால் கோவை விமான நிலைய விரிவாக்கத்தை, தொழில் துறையினர் பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.தமிழக அரசு 1,132 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதை தொடர்ந்து, நில எடுப்பு பணி முழு வீச்சில் நடக்கிறது.

இந்நிலையில், விமான நிலையத்தை அடுத்த 30 ஆண்டு கால தேவைக்கு தகுந்தபடி மேம்படுத்தும் திட்டத்துக்கு, ஆலோசகர் நியமிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. வடிவமைப்பு மற்றும் பொறியியல் ஆலோசகர் நியமிப்பதற்கான இந்த டெண்டரை, விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.

சர்வே, டிஜிட்டல் மேப்பிங், விமானங்கள் பார்க்கிங் வசதி ஏற்படுத்துதல், ஓடுபாதை நீளம் அதிகரித்தல், டெர்மினல் கட்டடம் விரிவாக்கம், ஏர் டிராபிக் கன்ட்ரோல் அமைத்தல், தொழில்நுட்ப வளாகம், தீயணைப்பு வளாகம், விமானம் இயக்குவதற்கு தேவையான பயிற்சி பெறும் வசதிகள், பழுது நீக்கும் வசதி, சோலார் மின் உற்பத்தி நிலையம், வணிக மனைகள், உணவகங்கள், சரக்கு ஏற்றி இறக்கும் வளாகம், கார் பார்க்கிங், பாதுகாப்பு அதிகாரிகளுக்கான தங்கும் வசதிகள், பயணிகள் ஓய்வறைகள் என அடுத்த, 30 ஆண்டுக்கு தேவையான மாஸ்டர் பிளான் தயாரித்தல் இந்த பணியில் அடங்கும்.திட்டம் 32 மாதங்களில் நிறைவேற்றப்பட வேண்டும்.

கோவை விமான நிலையத்தின் மேம்பாட்டு திட்டத்துக்கு, 809 கோடி ரூபாய் செலவாகும் என்று, ஏப்.,13ல் விமான நிலைய ஆணையம் வெளியிட்ட டெண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவைமாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments