ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடியின் உருவச்சிலை மேகாலயாவில் உள்ள ராணுவ மையத்தில் திறக்கப்பட்டது!

 

-MMH

      கோவை பெ.நா. நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கண்ணாளன் கென்னடி. கடந்த, 93ம் ஆண்டு காஷ்மீர் சம்சாபாரி என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது,  பயங்கரவாதிகள் எல்லையை தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவியதாக தகவல் கிடைத்தது. உடனடியாக எல்லைப் பகுதிக்கு கென்னடி உள்ளிட்ட ராணுவ வீரர்கள் விரைந்தனர்.

நான்கு பயங்கரவாதிகளை கென்னடி சுட்டு வீழ்த்தினார். முகாமுக்கு திரும்பியபோது பனி பாறைகளுக்கு இடையே கென்னடியின் கால் சிக்கிக்கொண்டது. இதனால், தப்பி ஓடிய பயங்கரவாத கும்பல், கென்னடியை நோக்கி சுட்டது. இதில், அவர் வீரமரணம் அடைந்தார்.கென்னடியின் வீரத்தை போற்றி, 'கீர்த்தி சக்ரா' விருது கொடுத்து, இந்திய அரசு கவுரவப்படுத்தியது. அவரது நினைவாக நாயக்கன்பாளையத்தில் நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. அதில், அவர் பயன்படுத்திய பொருட்கள், ராணுவத்தில் பணியாற்றிய போது பெற்ற பதக்கங்கள் உள்ளிட்ட பொருள்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.கென்னடியின் வீரத்தை போற்றும் வகையில் மேகாலயாவில் உள்ள டெக்கான் டேவில்ஸ் யூனிட் சார்பில் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. திறப்புவிழா நிகழ்ச்சியில், கென்னடியின் குடும்பத்தினர் உள்ளிட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

-சுரேந்தர்.

Comments